வாலிபர் கொலை- பதற்றம்
நெல்லை மாவட்டம் வடக்கு தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். 35 வயதான அவர் ஒப்பந்த அடிப்படையில் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். தாழையூத்து பகுதியில் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் கண்ணன் வசித்து வந்தார்.
கண்ணன் வீடு உள்ள பகுதியில் கடந்த சில தினங்களாகக் குடிநீர் வரவில்லை. அத்துடன் அவர் பணி செய்யும் இடத்துக்கும் தண்ணீர் தேவைப்பட்டிருக்கிறது. அதனால் கட்டுமானப் பணிக்காக வைத்திருந்த லோடு ஆட்டோவில் தண்ணீர் பிடிக்கச் சென்றுள்ளார்.
நெல்லை-மதுரை நான்கு வழிச் சாலையில் உள்ள பண்டாரகுளம் பகுதியில் தண்ணீர் பிடிக்க லோடு ஆட்டோவை டிரைவர் ஓட்டிச் செல்ல கண்ணன் உடன் சென்றிருக்கிறார். கேனில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது, உடல் உபாதையைக் கழிக்க டிரைவர் அங்கிருந்த புதருக்குள் சென்றுள்ளார்.
கண்ணன் மட்டும் தனியாக இருந்தபோது இரு சக்கர வாகனங்களில் 6 பேர் வந்திருக்கிறார்கள். அந்த கும்பலை சேர்ந்தவர்கள், கண்ணனை சூழ்ந்து கொண்டு சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளனர். குற்றுயிராகக் கிடந்த கண்ணனின் உடலை கழிவு நீர் செல்வதற்காகக் கட்டப்பட்டுள்ள ஓடையில் அந்த கும்பல் வீசியுள்ளது.
கண்ணனின் அலறல் சத்தம் கேட்டு டிரைவர் ஓடி வந்து பார்த்தபோது அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது.
உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த கண்ணனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் வாகனத்தில் ஏற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார். கொலை சம்பவம் பற்றி அறிந்ததும் கண்ணனின் உறவினர்கள் தாழையூத்து பகுதியில் திரண்டு சாலை மறியல் செய்ய முயன்றனர். உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற மாவட்ட எஸ்.பி-யான மணிவண்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீமைசாமி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.இதனை அடுத்து அங்கு பதற்றம் நிலவுகிறது.
Tags :