சோதனைக்கு சென்ற ஐடி அதிகாரி.. வீட்டில் புகுந்த திருடன்

by Staff / 01-05-2023 04:26:50pm
 சோதனைக்கு சென்ற ஐடி அதிகாரி.. வீட்டில் புகுந்த திருடன்

சென்னை நுங்கம்பாக்கத்தில் வருமான வரித்துறை அலுவலர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் வருமானவரித்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். அந்த வகையில் ராமசுப்பிரமணியன் என்ற அதிகாரியும் தனது மனைவி ஆஷா (வயது 27) மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதற்காக கடந்த 25 ஆம் தேதி இரவே ராமசுப்பிரமணியன் பணிக்கு சென்றார். இரவு வீட்டில் ராமசுப்பிரமணியனின் மனைவி ஆஷா தனது இரண்டு வயது மகனுடன் தனியாக இருந்துள்ளார்.

அப்போது இரவு திடீரென பக்கத்து அறையில் ஆள்நடமாட்டம் இருப்பது போல அவருக்கு தெரிந்துள்ளது. மேலும் பீரோ திறப்பது போல சத்தமும் கேட்டதால் உடனே எழுந்து சென்று பார்த்து இருக்கிறார். அங்கு ஜன்னல் வழியாக ஒருவர் தப்பி ஒடியிருக்கிறார். இதனால் பதறிப்போன ஆஷா, பீரோவை திறந்து பார்த்த போது அதில் 81 லட்சம் மதிப்புள்ள 18 சவரன் தங்க, வைர நகைகள் மற்றும் 1 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்து.

இது குறித்து கணவர் ராமசுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ராமசுப்பிரமணியன் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் கை ரேகை பதிவுகளையும் சேகரித்து கொள்ளையடித்த நபரை தீவிரமாக தேடினர்.சிசிடிவி காட்சியில் பதிவான பதிவுகளை கொண்டு போலீசார் ஆய்வு செய்ததில் கொள்ளையடித்த நபர் ஆனந்த் (வயது 20) என்பது கண்டறியப்பட்டது. ஏற்கனவே குற்ற வழக்குகளில் சிக்கிய அவர் வில்லிவாக்கத்தில் பதுங்கியிருந்த போது போலீசார் கைது செய்தனர். கொள்ளையனிடம் இருந்து 34 கிராம் நகை, 18 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via