இந்தியாவில் எந்த நேரத்திலும்  கொரோனா 3வது அலை தாக்கலாம் இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை

by Editor / 24-07-2021 04:18:12pm
 இந்தியாவில் எந்த நேரத்திலும்  கொரோனா 3வது அலை தாக்கலாம் இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை

 

இந்தியாவை எந்த நேரத்திலும் கொரோனா 3-வது அலை தாக்கலாம் என இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் 2-வது அலை நாட்டில் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியுள்ளது. தற்போது பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் சமூக விலகலை மதிக்காமலும், கடைப்பிடிக்காமலும் கூட்டமாகச் செல்லுதல், முகக்கவசம் சரியாக அணியாமல் இருத்தல் போன்ற விதிமுறைகளை மீறுகிறார்கள். இதனால் கொரோனா 3-வது அலை உருவாகும் சூழலுக்கு வழிவகுக்கிறார்கள். மக்கள் வெளியில் செல்லும்போது தனிமனித இடைவெளி, முகக்கவசம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசும், மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன.


உலக நாடுகளில் கொரோனா 3-வது அலை பரவத் தொடங்கிவிட்டது. இங்கிலாந்து, ரஷ்யா, கொலம்பியா, பிரேசிலில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான் கொரோனா 3-வது அலை இந்தியாவை எந்த நேரத்திலும் தாக்கக் கூடும் என இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மேலும் சுற்றுலா தலங்கள், யாத்திரைகள் ஆகியவற்றுக்கு மாநிலங்கள் அனுமதி அளிக்க வேண்டாம் எனவும் இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.


மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், கொரோனா 3-வது அலை குறித்து நாங்கள் எச்சரிக்கை விடுப்பதை மக்கள் வானிலை அறிக்கை படிக்கிறோம் என நினைக்க வேண்டாம். தயவு செய்து கொரோனா 3-வது அலை குறித்த விபரீதங்களை, ஆபத்தைப் புரிந்து கொள்ளுங்கள், நமக்குப் பொறுப்பு இருக்கிறது.


கடந்த 2 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டுக் கிடந்தோம். இப்போது சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்ற ரீதியில் மக்கள் வெளியே சுற்றுகிறார்கள். கொரோனா பற்றிக் கவலைப்படாமல் கூட்டம் கூட்டமாகச் செல்கிறார்கள். கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் 11 மாநிலங்களுக்கு மத்திய குழு சென்றுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் தவிர்த்து மகாராஷ்டிா, சத்தீஸ்கர், கேரளா, ஒடிசாவுக்கும் குழு அனுப்பப்பட்டு கொரோனா பரவல் ஆய்வு செய்யப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via