கேட் தேர்வில் 67 வயது தமிழ் மாணவர் வெற்றி

by Editor / 24-07-2021 04:18:38pm
கேட் தேர்வில்  67 வயது தமிழ் மாணவர் வெற்றி

சென்னையை சேர்ந்த 67 வயதான சங்கர நாராயணன், பொறியியல் துறையில் மேற்படிப்பிற்கான கேட் நுழைவுத் தேர்வில், இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்திய அளவில் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 17 சதவீத மாணவர்களில் இவரும் அடங்குவார்.

வயதை கணக்கில் கொள்ளவில்லை, கொரோனா பயத்தையும் பொருட்படுத்தவில்லை என்று கூறும் சங்கரநாராயணன், தனக்கு விருப்பமான ஆகுமென்ட் ரியாலிட்டி புலத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக கேட் தேர்வை எழுதியாக கூறுகிறார். தற்போது சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐஐடி)ஆய்வு படிப்பிற்காக விண்ணப்பித்துள்ளதாக கூறுகிறார்.
கேட் தேர்வில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை தேர்வு செய்த சங்கர நாராயணன், கணிதத்தில் 338 மதிப்பெண்களும், அறிவியலில் 482 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார். 1987ல் முதல்முறை கேட் தேர்வை எழுதியதாகவும், அப்போது தேர்ச்சி பெற்று ஐஐடி காரக்பூரில் எம்.டெக் படித்ததாகவும் தெரிவித்தார்.


''ஐஐடி காரக்பூரில் படிப்பை முடித்துவிட்டு, சொந்த ஊரான திருநெல்வேலியில் இந்து கல்லூரியில் பேராசிரியராக 10 ஆண்டுகள் பணியாற்றினேன். கணினி துறையில் ஈடுபாடு அதிகம் இருந்ததால், அமெரிக்கா மற்றும் சௌதியில் அந்த துறையில் பணியாற்ற வாய்ப்புகள் வந்தபோது ஏற்றேன். என் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்தியா திரும்பினேன். ஆனாலும் தொடர்ந்து கணினி துறையில் பணியாற்றுவதை ஈடுபாட்டுடன் செய்துவந்தேன். தற்போது அந்த ஈடுபாடுதான் என்னை கேட் தேர்வை மீண்டும் எழுதவேண்டும் என என்னை தூண்டியது,''என்கிறார் சங்கரநாராயணன்.
 

 

Tags :

Share via