தமிழகத்தில் சாராய வேட்டையில்  இதுவரை 1842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1558 குற்றவாளிகள் கைது.

by Editor / 15-05-2023 10:17:37pm
தமிழகத்தில் சாராய வேட்டையில்  இதுவரை 1842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1558 குற்றவாளிகள் கைது.

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கள்ளச்சாராயம் அருந்தியதால் இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர். தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக அதிரடி சோதனை நடத்தப்பட்டது.சாராய வேட்டையில்  இதுவரை 1842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வேட்டையில் 19028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. 4943 லிட்டர் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டது. கள்ளச் சந்தையில் விற்கப்பட்ட 16,493 IMFL பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் 218 லிட்டர் கள் கைப்பற்றப்பட்டுள்ளது கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட 1 நான்கு சக்கர வாகனமும் 7 இரண்டு சக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த 2023 ஆம் ஆண்டு இதுவரையில் 55,474 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55,173 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 4,534 பெண்கள் அடங்குவர். இந்த ஆண்டு இதுவரையிலும் 2,55,078 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேபோல் கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட 69. 4 சக்கர வாகனங்கள் உள்ளிட்ட 1077 மோட்டார் வாகனங்கள் இந்த ஆண்டு மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் கள்ளச்சாராய  வழக்குகளில் ஈடுபட்ட 79 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தகவல் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via