பெல்ஜியத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 125 பேர் உயிரிழப்பு
மேற்கு ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக 125க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 1,300 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"மேற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில், இரண்டு மாதங்களில் பெய்ய வேண்டிய மொத்த மழையும் இரண்டே நாட்களில் பெய்துள்ளன. இதன் காரணமாக பல நாடுகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது" என்று உலக வானிலை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிளேர் நுல்லிஸ் கூறினார்.
ஐரோப்பாவின் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்த நிலையில் , மேற்கு ஜேர்மனியில் மிக அதிகமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ரைன்லேண்ட்-பாலாட்டினேட் மாநிலத்தில் 63 பேரும் , வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் 43 பேரும் உயிரிழந்த னர். பெல்ஜியத்தில் இறப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
ஐரோப்பாவில் பேரழிவிற்குள்ளான பகுதி முழுவதும் உள்ள வெள்ள நீரை வெளியேற்றி, சுத்தம் செய்து, மீட்பு நடவடிக்கைகள் செய்த பிறகுதான் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.1,300 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜெர்மனியில் சுமார் 900 ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சாலைகள் சேதமடைந்து, தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags :