அரசு வேலைக்கு பதிவுசெய்து காத்திருப்போர்  68 லட்சம் பேர்:

by Editor / 24-07-2021 04:39:56pm
அரசு வேலைக்கு பதிவுசெய்து காத்திருப்போர்  68 லட்சம் பேர்:



தமிழ்நாட்டில் 67 லட்சத்து 76 ஆயிரத்து 945 பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு, அரசு வேலைக்காக காத்திருக்கிறார்கள் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் பெரும்பாலான இளைஞர்கள் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவுடன் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு காத்து கொண்டிருப்பதோடு, தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் தேர்வுகளையும் எழுதி கொண்டு வருகின்றனர்.
தேர்வெழுதி அரசு வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.


இந்நிலையில் தமிழ்நாட்டில் மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது. அதில், 30.6.2021-ன் நிலவரப்படி 19 முதல் 23 வயது வரையுள்ள கல்லூரி மாணவர்கள் 16 லட்சத்து 49 ஆயிரத்து 473 பேரும், 24 முதல் 35 வயது வரையுள்ள 24 லட்சத்து 88 ஆயிரத்து 254 பேரும் பதிவு செய்து காத்துள்ளனர்.


மேலும், 36 முதல் 57 வயது வரை உள்ள 12 லட்சத்து 26 ஆயிரத்து 417 பேரும், 58 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 ஆயிரத்து 907 பேரும் என மொத்தமாக 67 லட்சத்து 76 ஆயிரத்து 945 பேர் அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். அதேபோன்று மாற்றுத்திறனாளிகளில் 90,522 ஆண்கள், 45,993 பெண்கள் என மொத்தம் 1,36,515 பேர் பதிவு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via