நைஜீரியர்கள் மூன்று பேர் பெங்களூரில் கைது

by Staff / 02-06-2023 12:50:34pm
நைஜீரியர்கள் மூன்று பேர் பெங்களூரில் கைது

சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன வங்கி கணக்கை, இணையதளம் வாயிலாக முடக்கி, 17. 30 லட்சம் ரூபாயை சுருட்டிய, நைஜீரியாவைச் சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்தனர். சென்னை, ஆயிரம்விளக்கில் உள்ள தனியார் டைல்ஸ் நிறுவன பொது மேலாளர், தங்கள் நிறுவன வங்கிக் கணக்கை இணையதளம் வாயிலாக முடக்கி, 17. 30 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் அபகரித்துள்ளதாக, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.மத்திய குற்றப்பிரிவு 'சைபர் கிரைம்' போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளியை பிடிக்க ஆய்வாளர் வினோத்குமார் தலைமையில், ஐந்து பேர் தனிப்படையை அமைத்தனர். தனியார் நிறுவன வங்கி தகவல்கள், சைபர் குற்றவாளிகளால் 'இ-மெயில்' வாயிலாக திருடப்பட்டுள்ளது. வங்கி கணக்கோடு இணைக்கப்பட்ட மொபைல் எண்ணையும் முடக்கி, அதே மொபைல் எண்ணின் புது சிம் கார்டை பெற்றுள்ளனர். வங்கி பரிவர்த்தனையின் போது பெறப்படும் ரகசிய குறியீட்டு எண்ணை, புது சிம் கார்டு எண்ணில் பெற்று, மர்ம ஆசாமிகள் பணத்தை சுருட்டியது விசாரணையில் தெரியவந்தது. பெங்களூரில் இருந்து மோசடியில் ஈடுபட்டதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். பண ப்பறிமாற்றம் நடந்த, எஸ். பி. ஐ. , உள்ளிட்ட ஒன்பது வங்கிகளில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், மோசடியில் ஈடுபட்டவர்கள் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, பெங்களூரு கே. ஆர். புரம் போலீசார் உதவியுடன், மோசடியில் ஈடுபட்ட, யூசப்ஒலாலேகான், 30, ஒபியேலு பீட்டர், 41, ஒல்யூபூபே ஜேம்ஸ், 25 ஆகிய மூவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, இரண்டு மடிக்கணிணி, ஒன்பது மொபைல்போன், 14 சிம்கார்டு மற்றும் 12 சேமிப்பு கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

Tags :

Share via