தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவன் மனைவிக்கு தலா 12 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும்,கணவருக்கு கூடுதலாக 3 வருடம் சிறை.
தூத்துக்குடி மாவட்டம் புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகாலெட்சுமி காலனி பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் அதே பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரது மனைவி வீரம்மாள் (46) என்பவரை அவதூறாக பேசி துடைப்பத்தால் தாக்கியதில் மனமுடைந்து மேற்படி வீரம்மாள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்தவர்களான சுப்பா மகன் கிருஷ்ணன் (58) மற்றும் அவரது மனைவி மல்லிகா (53) ஆகிய இருவரையும் புதூர் காவல் நிலைய போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து மேற்படி 2 பேரையும் கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய புதூர் காவல் நிலைய ஆய்வாளர்கள் சண்முகம் மற்றும் . பிச்சையா ஆகியோர் புலன் விசாரணை செய்து கடந்த 25.12.2015 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமனுஜம் நேற்று (30.06.2023) குற்றவாளிகளான கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி மல்லிகா ஆகிய இருவருக்கும் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 355ன் கீழ் தலா 2 வருடம் மெய்க்காவல் சிறை தண்டனையும், அபராதம் ரூபாய் 1000/-மும் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 306ன் கீழ் தலா 10 வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 10,000/-அபராதம் விதித்தும், இதுதவிர குற்றவாளி கிருஷ்ணனுக்கு தமிழ்நாடு பெண் துன்புறுத்தல் தடைச்சட்டம் பிரிவு 4ன்படி (Section 4 of TNPHW act) கூடுதலாக 3 வருடம் மெய்க்காவல் சிறை தண்டனையும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்தும், ஆக மொத்தம் குற்றவாளி கிருஷ்ணன் என்பவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதம் ரூபாய் 21,000/- மும், மற்றொரு குற்றவாளியான அவரது மனைவி மல்லிகாவிற்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதம் ரூபாய் 11,000/-மும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய புதூர் காவல் நிலைய ஆய்வாளர்கள் சண்முகம் மற்றும் பிச்சையா ஆகியோர்களையும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாளையும், விசாரணைக்கு உதவியாக இருந்த காவலர்கள் சூர்யகுமார், மற்றும் நவீன் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.Tags :