முன்விரோதம் காரணமாக குழந்தையை கடத்தியவர் கைது
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் அருகே கோனேரிப்பட்டி கிராமம், வெள்ளாளபாளையத்தில் வீட்டின் வெளிய விளையாடி கொண்டிருந்த 4 வயது குழந்தையை முன்விரோதம் காரணமாக கடத்தி சென்றவரை தேவூர் போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கோனேரிப்பட்டி கிராமம், வெள்ளாளபாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி லோகநாதன், கௌசல்யா தம்பதியருக்கு ஹரிபிரித்தி (5), சிவகார்த்திக் (4) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திங்கள்கிழமை லோகநாதனுக்கு பிறந்தநாளையொட்டி வேலைக்கு செல்லாமல் கேக் வெட்டிக் கொண்டாட மகனை அழைத்துள்ளார். அப்போது சிவகார்த்திக்கை தேடியுள்ளனர். அப்போது அப்பகுதி பொதுமக்கள் அதே ஊரைச் சேர்ந்த லட்சுமணன் (43) இரு சக்கர வாகனத்தில் குழந்தையுடன் சென்றதாக கூறியுள்ளனர். இதனிடையே லோகநாதனுக்கும் லட்சுமணனுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை மனதில் வைத்துக் கொண்டு லோகநாதனின் நான்கு வயது குழந்தையை லட்சுமணன் அழைத்துச் சென்றதாகவும் இது குறித்து லோகநாதன் தேவூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று காலை காவரி ஆற்றங்கரையோரம் வாழைத் தோட்டத்தில் மயங்கிய நிலையில் கிடந்த சிறுவனை மீட்டு தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து சங்ககிரி உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா, சங்ககிரி காவல் ஆய்வாளர் தேவி ஆகியோர் மேல்விசாரணை செய்து தலைமறைவான லட்சுமணனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக குழந்தையை கடத்திய அவரை போலீசார் கைது செய்த சம்பவம் தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.Tags :