மாவட்ட செயலாளர்களுடன்  எடப்பாடி, ஓ.பி.எஸ். ஆலோசனை

by Editor / 22-07-2021 03:36:04pm
மாவட்ட செயலாளர்களுடன்  எடப்பாடி, ஓ.பி.எஸ். ஆலோசனை



சென்னையில் அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திடீர் ஆலோசனை நடத்தினார்கள்.
தேர்தல் நேரத்தில் தி.மு.க. அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காததை கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
இன்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் வீடு மற்றும் 21 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் பலருடன் போன் மூலம் உரையாடிவந்த சசிகலா, தற்போது பல ஊடகங்களுக்கு நேரடியாகப் பேட்டியளித்து வருகிறார். அரசியல் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தான் பல்வேறு ஆலோசனைகள் வழங்கியதாகவும், பிரிந்துள்ள அண்ணா தி.மு.க. இணைய வேண்டும் என்பதே தன் எண்ணம் எனவும் சசிகலா தொடர்ந்து கூறி வருகிறார்.
அண்ணா தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சந்தித்து உடல் நலம் விசாரிப்பதற்காக எடப்பாடி பழனிசாமி சென்றிருந்தார். அதே நேரம் சசிகலாவும் அங்கே வந்தார். எடப்பாடி அங்கிருந்து செல்லும் வரை காரில் இருந்த சசிகலா பின்னர் மருத்துவமனைக்கு சென்று மதுசூதனனை நலம் விசாரித்தார். மருத்துவமனைக்கு வந்திருந்த சசிகலா, ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அண்ணா தி.மு.க. கொடியுடன் வந்திருந்தது சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில் சசிகலா விவகாரம், மதுசூதனன் உடல்நலம், 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல், அண்ணா தி.மு.க. உட்கட்சித் தேர்தல், வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்க, இன்று ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தல் முன்னாள் அமைச்சர்களும், அண்ணா தி.மு.க. நிர்வாகிகளுமான பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, டி.ஜெயக்குமார், உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்காததை கண்டித்தும் தமிழகம் முழுவதும் வரும் 28 ந்தேதி (புதன்கிழமை) போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

 

Tags :

Share via