ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டம்

by Editor / 22-07-2021 03:38:09pm
ராகுல் காந்தி தலைமையில்  காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டம்

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தி தலைமையில் இன்று பார்லிமெண்ட் வளாகத்தில் போராட்டம் நடத்தினார்கள்.

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

கொரோனா காலத்தில் போராட்டம் சற்று ஓய்ந்திருந்தநிலையில் தற்போது இயல்பு வாழ்க்கை திரும்புவுதால் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக டெல்லியில் பார்லிமெண்ட் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதற்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று ராகுல் காந்தி தலைமையில் பார்லிமெண்ட் வளாகத்தில் காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தினார்கள். காங்கிரஸ் தலைவர்கள் சசிதரூர், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ஆதீர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

”விவசாயிகளை காப்பாற்றுவோம்", "நாட்டைக் காப்பாற்றுவோம்" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி, அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via