சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பங்கேற்பு
சென்னை பல்கலை. யின் 165-ஆவது பட்டமளிப்பு விழா, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 6) நடைபெறவுள்ள நிலையில், அதில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பங்கேற்று பட்டமளிப்பு விழா பேருரையாற்றவுள்ளாா். பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 134 இணைப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கடந்த கல்வியாண்டில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை படித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டச் சான்றிதழ் வழங்குவதற்கான சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழா சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா் அரங்கில் காலை 10. 30 மணிக்கு நடைபெறவுள்ளது. அதில், முதன்மை விருந்தினராக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பங்கேற்று பட்டமளிப்பு விழா பேருரையாற்றவுள்ளாா். விழாவுக்கு பல்கலை. யின் வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆா். என். ரவி தலைமை வகித்து பட்டம் வழங்கவுள்ளாா். முதல்வா் மு. க. ஸ்டாலின் கெளரவ விருந்தினராக பங்கேற்று வாழ்த்துரை வழங்கவுள்ளாா். இதில் உயா்கல்வித் துறை அமைச்சா் க. பொன்முடி, சென்னை பல்கலை. துணைவேந்தா் ச. கெளரி, ஆட்சிப்பேரவை, ஆட்சிமன்றக்குழு உறுப்பினா்கள், கல்வியாளா்கள் கலந்துகொள்ளவுள்ளனா்.
Tags :