கணவரின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண் இன்று காலையில் தற்கொலை.
பாவூர்சத்திரம் அருகே காவல்துறையில் பணிபுரியும் கணவரின் வீட்டின் முன்பு மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று காலையில் விரக்தியில் அதே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணி கிராமம் வ உ சி நகரை சேர்ந்த சின்னத்துரை என்பவரது மகள் குமுதா(23) என்பவருக்கும் ஆவுடையானூர் அருகே உள்ள ராயப்பநாடானூர் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரது மகன் சுதர்சன் (29)தற்பொழுது சென்னையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக பெரியோர்களின் முன்னிலையில் நிச்சயிக்கப்பட்டு திருமணமும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுதர்சன் திருமணமாகி 25 நாட்கள் மட்டுமே குமுதாவுடன் குடும்பம் நடத்திவிட்டு சென்னைக்கு சென்று வீடு பார்த்துவிட்டு பின்பு வந்து அழைத்துச் செல்வதாக கூறி குமுதாவின் தாய் வீட்டில் விட்டு சென்றுள்ளார் இருப்பினும் குமுதா தொலைபேசி வாயிலாக அழைத்த பொழுது அதனை சுதர்சன் நிராகரித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் சுதர்சன் குமுதாவிடம் உன்னை எனக்கு பிடிக்கவில்லை நான் வேறு ஒரு பெண்ணை விரும்புகிறேன் எனவும் கூறியுள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த குமுதாவின் குடும்பத்தினர் சுதர்சனின் குடும்பத்தினரிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் சுதர்சனின் பேச்சைக் கேட்டே இருந்துள்ளனர். தொலைபேசியில் குமுதா அழைக்கும் பொழுதெல்லாம் கெட்ட வார்த்தைகளால் திட்டியதாகவும் குமுதா வேதனையடைந்துள்ளார். மீண்டும் தன்னை அழைத்துச் செல்வார் என்ற ஏக்கத்தில் தனது தாய் வீடான கல்லூரணியில் இருந்த குமுதா ஒரு கட்டத்தில் நேற்று இரவில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு சுதர்சன் வந்திருந்ததை அறிந்து தனது உறவினர்களுடன் சேர்ந்து சுதர்சனின் வீட்டு வாயிலில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தன்னுடன் குடும்பம் நடத்தி விட்டு தற்போது வேண்டாம் என நிராகரித்து வரும் கணவருடன் தான் சேர்ந்து வாழ்வேன் என தெரிவித்திருந்தார். தர்ணாவில் இருந்த குமுதாவிடம் பலரும் பேச்சுவார்த்தை நடத்தினர் இச்சம்பவத்தால் ராயப்பநாடானூரில் பெரும் பரபரப்பு நிலவியது. குமுதா தர்ணாவில் இருந்ததை அறிந்து சுதர்சன் சுதாரித்துக் கொண்டு வீட்டிற்கு வராமலே இருந்துள்ளார். பாவூர்சத்திரம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. குமுதா நீண்ட நேரம் சுதர்சனின் வீட்டு வாயிலில் இருந்தபொழுதும் அவரது தாய் தந்தை வீட்டை பூட்டி சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர் குமுதா தனது தாய் வீட்டிற்கு இரவில் சென்ற நிலையில் இன்று காலையில் சுதர்சன் மற்றொரு செல்போன் நம்பரில் இருந்து குமுதாவை அழைத்து கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விரத்தி அடைந்த குமுதா காலை 8 மணி அளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாவூர்சத்திரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குமுதா மீது ஏற்கனவே சுதர்சன் போலீசில் புகார் அளித்திருந்ததாகவும் அதில் குமுதாவிற்கு மனநிலை சரியில்லை என்றும் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. பதிலுக்கு குமுதா உறவினர்களும் சுதர்சன் மீது ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். பல கட்டமாக விசாரணையில் பேச்சு வார்த்தைகள் நடத்தியும் உடன்படாததால் நேற்று இரவில் குமுதா தர்ணாவில் ஈடுபட காரணம் என்றும் தெரியவந்துள்ளது.
பாவூர்சத்திரம் அருகே இளம்பெண் பாதிக்கப்பட்டது குறித்து பேட்டி அளித்து இருந்த நிலையில் இன்று காலையில் அதே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் கல்லூரணி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.. குமுதாவின் இறப்பிற்கு காரணமான அவரது கணவர் மீது போலீசார் ஏதேனும் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்விக்கணையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
Tags : போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண் இன்று காலையில் தற்கொலை.