13 வயது சிறுவன் கொலை: சித்தப்பாவுக்கு ஆயுள் சிறை

வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சோ்ந்த 13 வயது சிறுவன் வெங்கடேசன். இவரை இவரது சித்தப்பா மலையாண்டி என்பவா் கடந்த 27. 5. 2011ஆன்று வாயில் துணியை அடைத்து, கை, கால்களை கட்டிப் போட்டு கொலை செய்ததாக வந்தவாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
இந்த வழக்கு ஆரணி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அரசு வழக்குரைஞா் ராஜமூா்த்தி வாதிட்டு, சிறுவனை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. தீா்ப்பு வழங்கப்பட வேண்டிய நிலையில், கடந்த 20. 7. 2023 அன்று நீதிபதி கே. விஜயா முன்பு நீதிமன்றத்திலேயே மலையாண்டி நெஞ்சு வலியால் அவதிப்பட்டு விழுந்தாா்.
இதைத் தொடா்ந்து அவா் தீவிர சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். தொடா்ந்து, நீதிமன்றம் சாா்பில் இதுவரை ஏழு முறை கடிதம் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் அவா் சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிய வருகிறது.
இந்த நிலையில், நீதிமன்றம் மூலம் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி கே. விஜயா, மலையாண்டிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பு அளித்தாா். மேலும், தீா்ப்பின் நகல் அவரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரை மருத்துவமனையில் இருந்து விடுவித்து வேலூா் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இந்த தீா்ப்பினால் ஆரணி நீதிமன்றத்தில் பரபரப்பு நிலவியது.
Tags :