தென்காசி மாவட்டத்தை அலறவிடும் மருத்துவர்களின் ஆடியோக்கள்.

by Editor / 13-04-2025 11:13:06am
தென்காசி மாவட்டத்தை அலறவிடும் மருத்துவர்களின் ஆடியோக்கள்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் மருத்துவரான முத்துக்குமார் என்பவர் தற்போது மருத்துவத் துறையில் நடைபெற்று வரும் முறைகேடுகள் குறித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், இந்த ஆடியோவானது தற்போது தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 அதாவது, வடக்குபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 4 மஸ்தூர் பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், இதில் ஒரு மஸ்தூர் பணியாளர் கடந்த ஒன்றரை வருடமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி செய்யாமல், சங்கரன்கோவில் பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவர் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்ததாகவும், அதற்கு அரசு சம்பளம் வழங்கியதாகவும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 மேலும், ஈஸ்வரன் என்ற அந்த மஸ்தூர் பணியாளர் பணிக்கு வராமல் இருந்த நிலையில் இது தொடர்பாக கேட்ட அந்த மருத்துவ அலுவலர் பணிக்கு வரும்படி கோரிக்கை விடுத்த நிலையில், தான் வர முடியாது என்று கூறிய நிலையில் வேறொரு பெண் பணியாளரை மருத்துவர் பணி அமர்த்திள்ளார்.

இந்த நிலையில், அவர் ஒரு மாத காலமாக பணியாற்றிய நிலையில், அவருக்கு சம்பளம் வழங்குவதற்கான ஆணையை மருத்துவர் மற்றும் சுகாதார ஆய்வாளர் வழங்கிய நிலையில், அதனை திருத்தம் செய்து அரசியல் பிரமுகர் வீட்டில் வேலை பார்த்து வரும் நபருக்கே சம்பளம் வழங்கப்பட்டதாகவும், இதனை வட்டார மருத்துவ அலுவலரும், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலரும் அந்த ஆணையை திருத்தம் செய்து வழங்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அந்த மருத்துவர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது அந்த மருத்துவர் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஆடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அந்த பெண் பணியாளருக்காக தான் நீதிமன்றம் வரை சென்று போராடுவேன் என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.

 குறிப்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டத்திற்கு வருகை தர இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகைக்காக தென்காசி மாவட்டத்தில் உள்ள 52 அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலா ரூ.10 ஆயிரம் வீதம் மாவட்ட மருத்துவ துறை அதிகாரிகள் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக ஒரு ஆடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த ஆடியோவால் அமைச்சர் வருகையும் ரத்து செய்யப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 இந்த நிலையில், தற்போது மற்றும் ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது தொடர்பாக அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : தென்காசி மாவட்டத்தை அலறவிடும் மருத்துவர்களின் ஆடியோக்கள்

Share via