NMMS - 2025  தேர்வில் தமிழக அளவில் நெல்லை மாவட்டம் முதலிடம்.

by Editor / 13-04-2025 11:08:13am
 NMMS - 2025  தேர்வில் தமிழக அளவில் நெல்லை மாவட்டம் முதலிடம்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகளை சார்ந்த திறமையான மாணவர்கள் இடைநிலைக் கல்வியைத் தொடரும் வகையில் மத்திய அரசு மூலமாக NMMS தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாநிலத்திலும் நடத்தப்பட்டு வருகிறது. 

2024-2025 கல்விஆண்டில் நடைபெற்ற NMMS- தேர்வில் தமிழக அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 6695 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.  இதில்   திருநெல்வேலி மாவட்டத்தைச்  சார்ந்த மாணவ மாணவியரே அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்று  (508 பேர்) மாநில அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார்கள்.இம் மாணவர்களுக்கு, ஒரு மாணவருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வீதம் நான்கு வருடங்களுக்கு ரூபாய் 48,000 வீதம் மொத்தம் ரூபாய் 2,43,84000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படவுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சிபெற்று மாநில அளவில் முதல் இடத்தை அடைவதற்கு  முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் தலைமையில் எடுக்கப்பட்ட சீரிய முயற்சியே காரணமாகும்.

இது குறித்து நெல்லை முதன்மைக் கல்வி அலுவலர் கூறியது

 மாவட்ட அளவில் NMMS தேர்வை அனைத்து பள்ளிகளும் எதிர்கொள்ளும் வகையில் 2024 செப்டம்பர் இறுதியில் திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  தலைமையில் மாவட்ட அளவில்,  மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்-3 பேர், வினாத்தாள் வடிவமைப்பாளர்கள் -10 பேர்,  மற்றும் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு ஒருங்கிணைப்பாளர்கள் வீதம் 10 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

பின்னர் மாவட்ட / வட்டார அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள் புலனக் குழு உருவாக்கப்பட்டது.   இவர்களுக்கு தேவையான  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.மேலும் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரையின் பேரில் வட்டார கல்வி அலுவலர்களும் தலைமை ஆசிரியர்களும் இப்பயிற்சிக்கு முழு ஒத்துழைப்பை நல்கினர். அவ்வப்போது பள்ளி பார்வையின் போது NMMS பயிற்சி மற்றும் மதிப்பெண்களை ஆய்வு செய்யப்பட்டது.

அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை MAT, SAT க்கு என பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன் அடிப்படையில் காலை பள்ளி துவங்குவதற்கு முன்பும், மதிய இடைவேளை மற்றும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்பட்டது .

மாவட்ட வினாத்தாள் வடிவமைப்பாளர்கள் மூலம் தரமான ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி வினாத்தாள்கள் வாரத்திற்கு ஒரு அலகு வீதம் 12 அலகுத் தேர்வுகளும், நான்கு வாரத்திற்கு ஒரு திருப்புதல் தேர்வு வீதம் 2 தேர்வுகளும், இறுதியில் மூன்று மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட்டன‌.

அலகுத்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் தொகுக்கப்பட்டு முதன்மை கல்வி அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு மேலும் மதிப்பெண்களை உயர்த்தும் வகையில் அவ்வப்போது google meet மூலம் ஆலோசனையும் அளிக்கப்பட்டது.
இதன் விளைவாக இந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் 508 மாணவ மாணவிகள் தேர்வாகி நெல்லை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 
 

 

Tags :  NMMS - 2025  தேர்வில் தமிழக அளவில் நெல்லை மாவட்டம் முதலிடம்.

Share via