கனிமவளக்கொள்ளைக்கு எதிராக அண்ணாமலை குரல் எழுப்பாதது ஏன்..?-முன்னாள் எம்.எல்.ஏ.கேள்வி..

by Editor / 06-09-2023 09:10:28am
கனிமவளக்கொள்ளைக்கு எதிராக அண்ணாமலை குரல் எழுப்பாதது ஏன்..?-முன்னாள் எம்.எல்.ஏ.கேள்வி..

கனிமவள கொள்ளைக்கு எதிராக மறியல் போராட்டம் நடத்துவேன் என்று அறிவித்த பாஜக தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் அவ்வாறு போராட்டம்  நடத்தாதது ஏன்?  என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என இயற்கை வள பாதுகாப்பு சங்கத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரவி அருணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக  பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்  கே அண்ணாமலை கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி பொள்ளாச்சி கிணத்துக்கடவு அரசன் பாளையம் பகுதியில் கேரளாவுக்கு கடத்தப்படும் கனிம வளக் கொள்ளையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

அந்தப் பகுதியில் நடக்கும் கனிம வள  கொள்ளையால்  தங்களுடைய விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டதால் அதற்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய  அண்ணாமலை இந்த பகுதியில் இருந்து மூன்று யூனிட் பாஸ் பெற்றுக் கொண்டு 1500 வாகனங்களில் தினசரி 12, 000 யூனிட் கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது என்றும் இதன் மூலம் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்றும் குறிப்பிட்டார்கள்.

கனிம வள கொள்ளையால் சாலைகள் சேதமடைவதுடன்  சாலையில் பயணிப்பவர்கள் விபத்துக்களால் பாதிக்கப்படுகிறார்கள் . எனவே கனிமக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அன்றிலிருந்து 20 நாட்கள் கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்துவதற்கு அரசுக்கு அவகாசம்  கொடுப்பதாகவும் அதன் பிறகும் கனிமவள கொள்ளை தடுக்கப்படவில்லை என்றால் என்றால் 21வது நாள் மாபெரும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார்கள். 

அந்த வழியாக கேரளா செல்லும் 11 சோதனை சாவடிகளிலும் ஒவ்வொரு சாவடிக்கும் 100 தொண்டர்கள் வீதம் மறியல் செய்யப் போவதாகவும் தானும் ஒரு சோதனை சாவடியில் மறியல் செய்யப் போவதாகவும் அறிவித்தார்கள். மேலும் இந்த ஆர்ப்பாட்டம் இத்துடன் முடியவில்லை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லி தனது பேச்சை முடித்தார்கள்.

 அண்ணாமலை அவர்கள் அறிவித்தபடி 21ஆம் நாள் மறியல் போராட்டத்தில் ஈடுபடவில்லை அது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் மறியல் போராட்டம் நடத்துவார்  என்று எதிர்பார்த்திருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர் .

திரு அண்ணாமலை மறியல் செய்யப் போவதாக அறிவித்து இன்றுடன் 188 நாட்களாகிறது.  பிப்ரவரி 28ஆம் தேதி கனிம வள கொள்ளை பற்றி பேசிய .அண்ணாமலை  அதற்குப் பிறகு அது பற்றி குரல் எழுப்பாதது ஏன்? என்று புரியவில்லை

அண்ணாமலை கூறியது போல கனிம வள கொள்ளை கோவை, பொள்ளாச்சி மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தேனி கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களுக்கு கனிமங்கள் கடத்தப்படுகிறது.

கனிமவள கொள்ளையால் தென்காசி மாவட்டம் பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது . கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி தென்காசி  பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை கனிம வள கொள்ளை குறித்து பேசுவார் என்று எதிர்பார்த்த இயற்கை ஆர்வலர்களுக்கு அவர் அது குறித்து பேசாதது ஏமாற்றத்தை அளித்தது . 

கனிம வளக் கொள்ளை பற்றி  குரல் எழுப்பாதது ஏன் என்பது குறித்து  அவரை பெரிதும் நம்பி வரும் விவசாயிகளுக்கு அண்ணாமலை பதிலளிக்க வேண்டும். தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Tags : k annamalai

Share via