பாராளுமன்றத்துக்கு ராகுல் காந்தி டிராக்டரை ஓட்டி வந்து போராட்டம்

by Admin / 26-07-2021 03:11:32pm
பாராளுமன்றத்துக்கு ராகுல் காந்தி டிராக்டரை ஓட்டி வந்து போராட்டம்



மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எந்த ஒரு நன்மையையும் அளிக்கப் போவது இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


வேளாண்மை தொடர்பாக மத்திய அரசு 3 சட்டங்களை கொண்டு வந்தது. இவை விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக இருப்பதாக கூறி பல்வேறு விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.
 
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந் தேதியில் இருந்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அன்றைய தினத்தில் இருந்து டெல்லியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் 11-வது மாதமாக நீடித்து வருகிறது.

இந்தநிலையில் டெல்லி நகருக்குள் போராட்டம் நடத்த விவசாயிகள் அனுமதி கேட்டனர். இதையடுத்து அவர்களுக்கு டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

அங்கு விவசாயிகள் திரண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் போராட்டத்துக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்தனர்.

இதேபோல பல்வேறு கட்சித் தலைவர்களும், போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்கள்.

இந்த நிலையில் இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். பாராளுமன்ற கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்ட ராகுல்காந்தி, விவசாயிகள் போராடும் பகுதிக்கு சென்றார்.

பாராளுமன்றத்துக்கு டிராக்டர் ஓட்டி வந்த ராகுல் காந்தி

பின்னர் அங்கிருந்து டிராக்டரில் ஏறி பாராளுமன்றத்தை நோக்கி அவர் வந்தார். டிராக்டரை அவரே ஓட்டினார். அருகில் காங்கிரஸ் தலைவர்களும், விவசாய சங்க பிரதிநிதிகளும் இருந்தனர்.

டெல்லி நகருக்குள் ராகுல் காந்தி டிராக்டர் ஓட்டி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏராளமானோர் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். அவர் டிராக்டரில் வந்ததால் அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து ராகுல் காந்தி கூறியதாவது:-

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாக குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் அவர்களுடைய போராட்டத்தை ஒடுக்குவதிலேயே மத்திய அரசு குறிக்கோளாக செயல்படுகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எந்த ஒரு நன்மையையும் அளிக்கப் போவது இல்லை. இரண்டு மூன்று பெரிய வியாபாரிகளுக்கு உதவும் வகையிலேயே இந்த சட்டங்கள் உள்ளன.

விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. ஆனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பதாக அரசு சொல்கிறது. போராட்டக்காரர்களை பயங்கரவாதிகள் போல் பாவிக்கிறார்கள். அவர்களுடைய கோரிக்கையை பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கு அரசு தயங்குகிறது.

விவசாயிகளின் செய்தியை பாராளுமன்றத்துக்கு கொண்டு செல்வதற்காகவே நான் இன்றைய போராட்டத்தில் பங்கெடுத்து இருக்கிறேன்.இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

 

 

Tags :

Share via