ரூ.13 லட்சத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம்

by Editor / 18-09-2021 07:15:37pm
ரூ.13 லட்சத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஊராட்சி மன்றத் தலைவர் பதவி 13 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை நடத்தினார் .

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்னங்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி , ஆதிதிராவிடர் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . பொன்னங்குப்பம் , துத்திப்பட்டு ஆகிய இரு கிராமங்களை உள்ளடக்கிய பொன்னங்குப்பம் ஊராட்சியில் 3,900 வாக்குகள் உள்ளன .

இந்த ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டு , துத்திப்பட்டு மதுரா பகுதியைச் சேர்ந்த மக்கள் 13 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்ததாக கூறப்படுகிறது . இதனால் பொண்ணங்குப்பம் ஊராட்சியைச் சேர்ந்த பலர் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர் .

இதுகுறித்துத் தகவலறிந்த விழுப்புரம் ஆட்சியர் மோகன் துத்திப்பட்டு கிராம மக்களிடையே உரையாற்றி , அரசியலமைப்புச் சட்டத்திற்கும் , மக்களாட்சியின் தத்துவத்திற்கும் புறம்பாக நடைபெறும் அத்தகைய நிகழ்வுகள் கண்டிக்கத்தக்கவை என கூறினார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவிகள் இவ்வாறு ஏலம் விடப்படுவது மக்களின் உணர்வுகளுக்கு ஊறு விளைவிக்கின்ற செயல் என்பதால், ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிப்பதைத் தடுத்திட மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது, மாவட்ட கலெக்டர்கள் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்மையில் மாநில தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்த நிலையில் இவ்வாறு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via