பெண்ணை ஏமாற்றி கற்பழித்த ராணுவ வீரர் - 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கோவை அருகே வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பெண்ணை கற்பழித்த ராணுவ வீரர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அந்த பெண் வேலை தேடி வந்தார். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வேலை இருந்தால் கூறும்படி தெரிவித்து இருந்தார்.
அப்போது அவருக்கு அண்ணன் முறையான தேனி மாவட்டம் போடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பழக்கமானார். அவர் அந்த இளம்பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக உறுதியளித்தார்.
இதனிடையே கடந்த மாதம் அந்த இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட அவர் உனக்கு நான் வேலை ஏற்பாடு செய்து விட்டேன், கோவை வருகிறேன். வேலை விஷயமாக உன்னிடம் ஒருவரை அறிமுகப்படுத்தி வைக்கிறேன். சுந்தராபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சந்தித்து பேசலாம் என்றார்.
இளம்பெண்ணும் அப்பாவித்தனமாக தனது குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு அந்த வாலிபர் கூறிய ஓட்டலுக்கு சென்றார். அங்கு அந்த வாலிபர் மட்டும் இருந்தார். சிறிது நேரம் வேலை விசயமாக பேசினர். பின்னர் அந்த வாலிபரின் பார்வை வேறுவிதமாக திரும்பியது.
இளம்பெண்ணை தொட்டு சில்மிஷம் செய்துள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் வலுக்கட்டாயமாக அவர் இளம்பெண்ணை கற்பழித்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியில் வீடு திரும்பிய அந்த இளம்பெண் இது குறித்து சில நாட்கள் வெளியே சொல்லாமல் குழப்பத்தில் இருந்துள்ளார். பின்னர் இது குறித்து கோவை போத்தனூர் போலீசில் புகார் தெரிவித்தார். இந்த வழக்கு கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்தது தேனி மாவட்டம் போடியை சேர்ந்த சரவணன் (38) என்பதும் அவர் ராணுவவீரராக உள்ளதும், விடுமுறையில் வந்த போது அவர் இளம்பெண்ணை கற்பழித்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து அவர் மீது பலாத்காரம், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய ராணுவர் வீரரை விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
Tags :