பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்

by Admin / 26-07-2021 03:10:08pm
பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்



தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி(76) உடல்நலக்குறைவால் காலமானார். வயது மூப்பு காரணமாகவும், சில ஆண்டுகளாக ஆஸ்துமாவாலும் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி சினிமாவை விட்டு விலகி இருந்தார். இந்நிலையில் இன்று (ஜூலை 26) காலமானார். தமிழ் திரைப்படத் துறையில் மறக்க முடியாத நடிகைகளில் ஜெயந்தியும் ஒருவர். கதாநாயகி, குணசித்திர வேடம், நகைச்சுவை என பன்முகத் திறமை வாய்ந்த நடிகையாக 1960 - 70 களில் தமிழ் திரை ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட நடிகையாக வலம் வந்தவர். கர்நாடக மாநிலம், பெல்லாரியில் 1945ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி பாலசுப்ரமணியம் - சந்தான லக் ஷ்மி தம்பதிக்கு மகளாக பிறந்தார். ஆரம்ப காலங்களில் சிறு சிறு துணை கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த இவருக்கு கே.பாலசந்தரின் 'பாமா விஜயம்' திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நாகேஷிற்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க பெற்றார். அதன்பின் தொடர்ந்து கே.பாலசந்தரின் படங்களில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து புகழடைந்தார். கே.பாலசந்தர் இயக்கத்தில் ஜெயந்தி நடித்த அத்தனை படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. 'எதிர் நீச்சல்" 'இரு கோடுகள்' 'புன்னகை' 'கண்ணா நலமா' வெள்ளி விழா என்று இவருடைய வெற்றிப் பயணம் தமிழ் திரையுலகில் தொடர்ந்தது.

அன்றைய முன்னணி கதாநாயகர்களாக போற்றப்பட்ட அத்தனை பேருடனும் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன் என்று எல்லோருடனும் நடித்தவர் ஜெயந்தி. இதே காலகட்டத்தில் கன்னடத்தில் நம்பர் ஒன் கதாநாயகியாக ராஜ்குமார், உதயகுமார், கல்யாண் குமார் போன்ற முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்து அங்கே தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையே ஏற்படுத்தி இருந்தார். இவர் ராஜ்குமாருடன் ஜோடியாக 30 கன்னட படங்களுக்கு மேல் நடித்த பெருமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் ஏறக்குறைய 500 படங்களுக்கு மேல் நடித்த பெருமை கொண்டவர். அபிநய சாரதே என திரையுலகில் அழைக்கப்படும் இவர் 6 முறை கர்நாடக மாநில அரசின் விருதை பெற்றுள்ளார். இதுதவிர நிறைய தனியார் அமைப்புகளின் விருதுகளையும் பெற்றுள்ளார். நடிகையாக மட்டுமல்லாது சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார்.

நடிகரும், இயக்குனருமான பெகடி சிவராமனை திருமணம் செய்த இவருக்கு கிருஷ்ண குமார் என்ற மகன் உள்ளார். ஜெயந்தியின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜெயந்தி நடிப்பில் வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்1. மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் - துணை நடிகை2. நினைப்பதற்கு நேரமில்லை - துணை நடிகை3. இருவர் உள்ளம் - துணை நடிகை4. அன்னை இல்லம் - துணை நடிகை5. படகோட்டி - துணை நடிகை6. கர்ணன் - துணை நடிகை7. கலைக்கோயில் - துணை நடிகை8. நீர்க்குமிழி - துணை நடிகை9. முகராசி - துணை நடிகை10. கார்த்திகை தீபம் - துணை நடிகை11. காதல் படுத்தும் பாடு - துணை நடிகை12. பாமா விஜயம் - கதாநாயகி13. பக்த பிரகலாதா - துணை நடிகை14. எதிர் நீச்சல் - கதாநாயகி15. இரு கோடுகள் - கதாநாயகி16. நில் கவனி காதலி - துணை நடிகை17. புன்னகை - கதாநாயகி18. நூற்றுக்கு நூறு - துணை நடிகை19. புதிய வாழ்க்கை - துணை நடிகை20. கண்ணா நலமா - கதாநாயகி21. வெள்ளி விழா - கதாநாயகி22. கங்கா கௌரி - கதாநாயகி23. பெண்ணை நம்புங்கள் - கதாநாயகி24. மணிப்பயல் - கதாநாயகி25. நல்ல முடிவு - துணை நடிகை26. சண்முகப்ரியா - துணை நடிகை27. எல்லோரும் நல்லவரே - துணை நடிகை28. குல கௌரவம் - கதாநாயகி29. தேவதை - கதாநாயகி30. மாப்பிள்ளை சார் - துணை நடிகை31. நானும் இந்த ஊருதான் - துணை நடிகை 32. பாலைவனப் பறவைகள் - துணை நடிகை33. சார் ஐ லவ் யூ - துணை நடிகை34. ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் - துணை நடிகை35. வீட்டைப்பாரு நாட்டைப்பாரு - துணை நடிகை36. கோபாலா கோபாலா - துணை நடிகை37. செங்கோட்டை - துணை நடிகை38.புதல்வன் - துணை நடிகை39. ஹவுஸ்புல் - துணை நடிகை40. அன்னை காளிகாம்பாள் - துணை நடிகை

 

Tags :

Share via