உள்ளாட்சி தேர்தல் : அரசியல் கட்சிகளின் சுவரொட்டி, பேனர்கள் அகற்றம்

by Editor / 14-09-2021 02:51:50pm
உள்ளாட்சி தேர்தல் : அரசியல் கட்சிகளின் சுவரொட்டி, பேனர்கள் அகற்றம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், பேனர்கள் கிழித்து அகற்றப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் 333 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கே, முதற்கட்ட தேர்தலில் 2000 போலீசாரும் இரண்டாம் கட்ட தேர்தலில் 1600 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம் கள்ளக்குறிச்சி, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. மாவட்டங்களை பிரித்ததன் காரணமாக, வார்டு மறு வரையறை பணிகள் முடியாததால், இந்த 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், வார்டு மறுவரையறை பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இந்த 9 மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. பதினைந்தாம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக மற்ற நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம பகுதிகளில் வசிப்பவர்கள் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் கிராம ஊராட்சி தலைவர் பஞ்சாயத்து யூனியன் உறுப்பினர் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் என நான்கு பதவிகளுக்கு நான்கு வாக்குகளை அளிக்க வேண்டும் வாக்குச்சீட்டு முறையில் இந்த தேர்தல் நடைபெறுகிறது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களிலும் 2069 பணியிடங்களுக்கு நேரடி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கென 1188 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 30 வாக்கு வாசவடிகள் ஆண் வாக்காளர்கள் மட்டும் வாக்களிக்கும் வகையிலும், 30 வாக்குச்சாவடிகள் பெண்கள் வாக்களிக்கவும் 1128 வாக்குச்சாவடிகள் அனைத்து வாக்காளர்களுக்கான வாக்குச் சாவடிகளாகவும் அமைக்கப்பட்டுள்ளன.

9 ஊராட்சி ஒன்றியங்களிலும், 6 லட்சத்து 73 ஆயிரத்து 868 வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற உள்ளனர். இதில், 3 லட்சத்து 30 ஆயிரத்து 487 பேர் ஆண்கள் 3 லட்சத்து 43 ஆயிரத்து 325 பேர் பெண்கள் 56 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். மாவட்டத்தைப் பொருத்தவரை ஊரக உள்ளாட்சி தேர்தலில் 333 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு வீடியோ பதிவுகள் மற்றும் நுண் தேர்தல் மேற்பார்வையாளர்கள் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு ஆகியவை ஏற்படுத்தப்படும்.

இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், முதற்கட்ட தேர்தலை நடத்த 5002 வாக்குப்பதிவு அலுவலர்களும், இரண்டாம் கட்ட தேர்தலுக்கு 4530 வாக்குப்பதிவு அலுவலர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால், அதனைக் கண்காணிக்க 5 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தேர்தல் நடைபெறும் கிராமப்பகுதிகளில் ஆய்வு செய்வர் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை கண்காணிப்பர்.

இதற்கென 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க 2 எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடக்கும் நாளான அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் காலை ஏழு மணி முதல் இரவு 6 மணி வரை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை வாக்குச்சாவடிக்கு சென்று பதிவு செய்யலா. மாலை 5 மணி வரை அனைத்து வாக்காளர்களும் 5 மணி முதல் 6 மணி வரை போரினால் பாதிக்கப்பட்ட வாக்காளர்களும் தனது ஜனநாயக கடமையை ஆற்றலாம். பதினைந்தாம் தேதி முதல் வேட்புமனு அளிக்கலாம் என்பதால் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளன.

ஊரக உள்ளாட்சிகளில் பஞ்சாயத்து யூனியன் உறுப்பினர் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஆகியவை அரசியல் கட்சிகள் சின்னங்களில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் வேட்பாளர்களை தேர்வு செய்ய அரசியல் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் சிறப்பு குழுக்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதனிடையே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் பேனர்கள், போஸ்டர்கள் ஆகியவை அகற்றப்பட்டு வருகிறன. பஞ்சாயத்து பணியாளர்கள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

Tags :

Share via