இந்திய தூதர், தூதரக ஊழியர்கள் டெல்லி வந்தனர்

by Editor / 17-08-2021 03:53:48pm
 இந்திய தூதர், தூதரக ஊழியர்கள் டெல்லி வந்தனர்

 


ஆப்கானிஸ்தானை தாலிபான் அமைப்பினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஆப்கானுக்கான இந்திய தூதர் மற்றும் தூதரக ஊழியர்கள் உள்ளிட்ட 120 பேர் நாடு திரும்பியுள்ளனர்.ஆப்கனை தாலிபான்கள் தன் வசம் ஆகியுள்ள நிலையில், தலைநகர் காபூலில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஆப்கன் தாலிபான் வசமானதும், பல்வேறு நாடுகள் காபூலில் உள்ள தூதரங்களை காலி செய்து விட்டனர்.இதையடுத்து ஆப்கானுக்கான இந்திய தூதர் ருதேந்திர டாண்டன் மற்றும் காபூலில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை திரும்ப அழைக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது.

இதன் எதிரொலியாக இந்திய தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட 120 பேர் இந்திய விமானப்படையின் சி17 விமானம் மூலம் காபூலில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த விமானம் சுமார் 11.25 மணியளவில் குஜராத்தில் உள்ள ஜாம்நகர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஜாம்நகர் விமான தளத்தில் இருந்து ஒரு பகுதி இந்திய தூதரக ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் குஜராத்தில் இருந்து எஞ்சிய இந்திய தூதரக ஊழியர்களுடன் புறப்பட்ட சி17 ராணுவ விமானம் டெல்லியில் தரையிறங்கியது.இதனிடையே பதற்றம் எதிரொலியாக ஆப்கானிஸ்தானில் இருந்து ஏராளமானோர் வெளியேற முயன்று வருவதால் இந்தியா வருவதற்காக அவசர கால இ - விசா நடைமுறை ஒன்றை ஏற்படுத்தி இருப்பதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via