வன்னியர், சீர்மரபினர் உள்ளிட்ட பிரிவினருக்கு சிறப்பு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை

by Editor / 27-07-2021 10:38:31am
வன்னியர், சீர்மரபினர் உள்ளிட்ட பிரிவினருக்கு சிறப்பு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 20% இட ஒதுக்கீட்டிற்குள்ளாக, வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு சட்டம் 8/2021 இயற்றப்பட்டது.

அதன் அடிப்படையில், அரசுப் பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் இன சுழற்சி முறையை திருத்தி அமைக்க, சட்ட வல்லுனர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தி ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் சட்டமன்ற பேரவையில் உறுதி அளித்திருந்தார்.

அதன்படி, சட்ட வல்லுநர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சியுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, இந்த சிறப்பு ஒதுக்கீட்டை 26-2-2021 முதல் செயல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதில், வன்னியர்கள் 10.5%, சீர்மரபினர் 7%, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5% என சிறப்பு ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

இது மட்டுமின்றி, இந்த ஆண்டு முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து கல்விச் சேர்க்கைகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான புதிய சிறப்பு ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்

 

Tags :

Share via