பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண பிரதமர் மோடி உத்தரவு...

by Admin / 27-07-2021 04:36:56pm
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண பிரதமர் மோடி உத்தரவு...



மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், எம்பிபிஎஸ் உள்ளிட்ட பட்டப் படிப்புக்கு 15 விழுக்காடு மற்றும் மேற்பட்டப் படிப்புக்கு 50 விழுக்காடு இடங்களை மத்திய தொகுப்புக்கு தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் ஆணை செயல்முறையில் உள்ளது. அகில இந்திய ஒதுக்கீடு எனப்படும் மத்திய தொகுப்பிற்கு, மாநில அரசுகளால் வழங்கப்படும் இடஒதுக்கீட்டில், பட்டியலின மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு தனி இடஒதுக்கீடும் பின்பற்றப்படுகிறது.

ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான ஓபிசி பிரிவினருக்கு, இந்த மருத்துவக் கல்விக்கான மத்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. மத்திய தொகுப்பில் ஓபிசி பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
 
இந்த நிலையில், ஓபிசி மாணவர்களின் இந்த நீண்டகால கோரிக்கையானது, விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த பிரச்சினையில் விரைவில் முடிவு எட்டப்பட வேண்டும் என்று, டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கல்வி, சுகாதாரத்துறை அமைச்சகங்களின் செயலாளர்கள், சட்டம் மற்றும் சமூக நீதி அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via