வாள் சண்டை வீராங்கனைக்கு மோடி ஆறுதல்

by Editor / 27-07-2021 04:49:51pm
 வாள் சண்டை வீராங்கனைக்கு மோடி ஆறுதல்


வாள் சண்டை போட்டியில் தோல்வி அடைந்ததால் வருத்தம் அடைந்த தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.


டோக்கியோ ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவின் முதல்சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவியும், துனிசியாவின் நாடியா பென் அஜிசியும் மோதினர். இதில் பவானி தேவி 15- 3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ஆனால் அடுத்த சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை மனான் புரூனேவுக்கு பவானி தேவி நல்ல பைட் கொடுத்தார். இருந்த போதிலும் 7- 15 என்ற கணக்கில் பவானி தேவி போராடித் தோல்வி அடைந்தார்.


சென்னையைச் சேர்ந்த பவானி தேவிக்கு வயது 27, இவரது பயிற்சியாளர் இத்தாலியைச் சேர்ந்த நிகோலா சனோட்டியாவார். இத்தாலியில் பயிற்சி பெற்று கடினமான பாதையில் பயணித்த பவானி தேவி 2009-ல் முதன் முதலில் வெண்கலம் வென்றார். 2010-ல் ஆசிய வாள் வீச்சிலும் பதக்கம் வென்றார்.


பதக்கம் வெல்லாதது குறித்து பவானி தேவியின் ட்விட்டர் பதிவில், ‘மிகப் பெரிய நாள். இது உற்சாகத்துடனும், உணர்ச்சிமிகுந்ததாகவும் இருந்தது. நான் முதல் போட்டியில் 15/3 என்ற கணக்கலில் நாடியா அசிசியை வென்று வாள்வீச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்திய வீராங்கனையாக இடம் பிடித்தேன். ஆனால், இரண்டாவது போட்டியில் 7 15 என்ற கணக்கில் உலகின் சிறந்த வீராங்கனையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மேனான் ப்ரூநெட்டிடம் தோல்வியடைந்தேன். நான் என்னுடைய பங்கை சிறப்பாகச் செய்தேன். ஆனால், வெற்றி பெறமுடியவில்லை. என்னை மன்னிக்கவும் ‘நான் வருந்துகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.


அவருடைய பதிவுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘உங்களுடைய சிறப்பான ஆட்டத்தை நீங்கள் கொடுத்துள்ளீர்கள். அது எல்லாம் கணக்கில் கொள்ளப்படும்.


வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி. உங்களுடைய பங்களிப்பால் இந்தியா பெருமைப்படுகிறது. நம்முடைய குடிமகன்களுக்கு நீங்கள் முன்னுதாரணம்’ என்று தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில், “உங்களது முயற்சியை கண்டு இந்தியா பெருமை கொள்கிறது. வெற்றிக்கான பயணத்தில் இது மற்றுமொரு படியாகும்” என்று வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.
அதேபோன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும், “தோல்வி குறித்து கவலைப்பட வேண்டாம். இதுதொடக்கம்தான். எதிர்காலத்தில் நிச்சயம் தங்கம் வெல்வீர்” என்று ஆறுதல் கூறியுள்ளார்.

 

Tags :

Share via