வாகனங்களுக்கு எரிவாயு வினியோகம் செய்ய 25 சி.என்.ஜி. நிலையங்கள் ஸ்டாலின் திறந்து வைத்தார்

by Editor / 27-07-2021 04:52:32pm
வாகனங்களுக்கு எரிவாயு வினியோகம் செய்ய 25 சி.என்.ஜி. நிலையங்கள் ஸ்டாலின் திறந்து வைத்தார்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எண்ணூர் அருகே உள்ள வல்லூரில் டோரண்ட் கேஸ் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள சிட்டி கேட் நிலையம் மற்றும் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 25 சிஎன்ஜி நிலையங்கள் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

டோரண்ட் கேஸ் நிறுவனம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் எரிவாயு விநியோகத் திட்டத்திற்காக, 5,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும், இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக, திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் அருகே உள்ள வல்லூரில் சிட்டி கேட் ஸ்டேஷன் (Mother Station) 1.4 ஏக்கரில் டோரண்ட் கேஸ் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 33 லட்சத்திற்கும் மேலான வீடுகளுக்கு குழாய் மூலமாக சமையல் எரிவாயு விநியோகம் செய்திட திட்டமிடப்பட்டுள்ளது.திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 25 சிஎன்ஜி நிலையங்கள் அமைக்கப்பட்டு, வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் மேற்கொள்ளத் தயார் நிலையில் உள்ளன. வல்லூரில் உள்ள சிட்டி கேட் நிலையத்திலிருந்து இந்த 25 சிஎன்ஜி நிலையங்களுக்கு எரிவாயு கொண்டு வரப்பட்டு, வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. டீசல் மற்றும் பெட்ரோலுக்கு மாற்றாக இது அமைவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கும். தற்போதுள்ள சிஎன்ஜி வாகனங்களுக்கும் இது உதவியாக இருக்கும்.

இந்த நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்ணி, டோரண்ட் கேஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஜீனல் மேத்தா, செயல் இயக்குநர் பிரகாஷ் சஜ்னானி, துணைத் தலைவர் ஆர். சித்தார்தன், தலைவர் (இயக்கம்) பிரசாத், பொது மேலாளர் கே.ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via