அடுத்த 3 நாட்களில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம்: வானிலை மையம்

by Staff / 19-10-2023 04:03:53pm
அடுத்த 3 நாட்களில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம்: வானிலை மையம்

வடகிழக்குப் பருவமழை அடுத்து வரும் மூன்று தினங்களில் தென்னிந்தியப் பகுதிகளில் துவங்கும். தற்போது அரபிக் கடல் பகுதியில், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. மேலும், வங்கக் கடல் பகுதியில் மற்றுமொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வரும் 21-ம் தேதியை ஒட்டி துவங்கக்கூடும். இந்த இரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகளின் காரணமாக, துவக்க நிலையில் வடகிழக்குப் பருவமழை தென்னிந்தியப் பகுதிகளில் வலு குறைந்து காணப்படும்" என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னை வானிலை மையத்தில், தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை, இந்தியப் பகுதிகளில் இன்றுடன் நிறைவடைகிறது. தற்போது கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் இருந்து, தென்னிந்தியப் பகுதிகளில் காற்று வீசக்கூடிய நிலையில், வடகிழக்குப் பருவமழை அடுத்து வரும் மூன்று தினங்களில் தென்னிந்தியப் பகுதிகளில் துவங்கும்.தென்மேற்கு பருவமழையைப் பொறுத்தவரை, பதிவான மழையின் அளவு 354 மி. மீட்டர். இயல்பு அளவு 328 மி. மீ. இது இயல்பை விட 8 சதவீதம் அதிகம். சென்னையைப் பொறுத்தவரை, பதிவான மழையின் அளவு 779 மி. மீ. இக்காலக்கட்டத்தின் அளவு 448 மி. மீ. இது 74 சதவீதம் இயல்பை விட அதிகம்" என்று அவர் கூறினார்.

 

Tags :

Share via