பாஜக அரசுக்கு சமூக நீதியில் அக்கறை இல்லை: கே. எஸ். அழகிரி

by Staff / 19-10-2023 04:17:01pm
பாஜக அரசுக்கு சமூக நீதியில் அக்கறை இல்லை: கே. எஸ். அழகிரி

சமூக நீதியில் அக்கறை இல்லாத அரசாக மத்திய பாஜக அரசு இருக்கிறது. அதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பை ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே சமூக நீதி நிலைநாட்ட முடியும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே. எஸ். அழகிரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்எஸ்எஸ், ஜனசங்கம் வழிவந்த பாஜக, என்றைக்குமே உயர்சாதியினர் ஆதரவு அமைப்பாக இருந்திருக்கிறதேயொழிய ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக சமூகநீதி கொள்கையை முழு மனதோடு ஏற்றுக் கொண்டதில்லை. அடுத்து வருகிற 2024 தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்படுகிற போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமுதாயத்தில் இருக்கிற ஏற்றத்தாழ்வுகளை, இடஒதுக்கீட்டில் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்து, சமூக நீதியை நிலைநாட்டுவோம் என்று தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருக்கிறார். அது நிறைவேறுகிற காலமே சமூகநீதியின் பொற்காலமாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், என்று அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via