கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; எப்ஐஆர் விவரம்
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் திடீரென நேற்று பெட்ரோல் குண்டு வீசினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய நபரை மடக்கி பிடித்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், அவர் தேனாம்பேட்டையை சேர்ந்த கருக்கா வினோத் என்பது தெரிய வந்தது.
வினோத்திடம் இருந்து மேலும் 2 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கிண்டி காவல் நிலைய போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் கவர்னரின் செயலாளர் கிரிலோஷ் குமார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். இந்த சம்பவத்தில் கருக்கா வினோத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றிய எப். ஐ. ஆர். பதிவில், பெட்ரோல் குண்டு அதிக சத்தத்துடன் வெடித்தது என்றும் அரசு அலுவலகம் மீது குண்டு வீசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவாகி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. அவரை பிடிப்பதற்காக போலீசார் விரட்டியபோது, மற்றொரு வெடிகுண்டை வீசியுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.
Tags :