ராணுவ உதவியை நாடும் ஆஸ்திரேலியா: அதிகரிக்கும் கரோனா பரவல்

by Admin / 29-07-2021 02:49:36pm
 ராணுவ உதவியை நாடும் ஆஸ்திரேலியா: அதிகரிக்கும் கரோனா பரவல்



ஆஸ்திரேலியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அங்கு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஒன்றரை மாதமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், சமீப காலத்தில் இல்லாத அளவுக்கு, கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) அதிகரித்தது.

இந்நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அங்கு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. டெல்டா வகை கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில் பெருந்தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் ஆஸ்திரேலியா திணறி வருகிறது. இதன் காரணமாக, கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக பொருளாதாரம் மந்தநிலையில் தள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் பிரிமியர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறுகையில், "ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 239 பேருக்கு புதிதாக கரோனா உறுதியானது. நிலைமை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு முன்பு இன்னும் மோசமாக மாறவுள்ளது.

தென்மேற்கு சிட்னியில் அமலில் உள்ள கடுமையான ஊரடங்கு நகரின் மேற்கு பகுதிகளுக்கும் அறிவிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள உயர் நிலை பகுதிகளில் பயிலும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் மற்ற பகுதிகளில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

பொருளாதார நிலை குறித்து பேசிய ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன், "கரோனாவால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு வாரத்திற்கு 74,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும். ஊதியத்தை இழந்த குறைந்த வருமானத்தை ஈட்டும் குடும்பத்தினருக்கு கூடுதல் சமூக நல உதவித் தொகை வழங்கப்படும்.

தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் சதவிகிதம் அதிகரித்தால் வீட்டிலிருந்து பணிபுரிவதற்கான உத்தரவுகள் இந்தாண்டு இறுதிக்குள் திரும்பப்பெற்று கொள்ளப்படும். ஆனால், எங்களுக்கு வேறு வழியில்லை" என்றார்.

 

 

Tags :

Share via