விவசாயிகள் குறைந்த வாடகையில் வேளாண் எந்திரங்கள் பெறலாம் - கலெக்டர் திவ்யதர்சினி

by Admin / 29-07-2021 04:40:02pm
விவசாயிகள் குறைந்த வாடகையில் வேளாண் எந்திரங்கள் பெறலாம் - கலெக்டர் திவ்யதர்சினி



தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைந்த வாடகையில் வேளாண் எந்திரங்களை பெறலாம் என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது உள்ள வேலையாட்கள் பற்றாக்குறையை சமாளித்து, விவசாய பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிப்பதற்காக, வேளாண் பொறியியல் துறை மூலம் பல்வேறு புதிய, நவீன வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மிகுந்த பயனை தரக்கூடிய மண் தள்ளும் எந்திரங்கள் (புல்டோசர்) 2-ம், டிராக்டர்கள் 7-ம் இருப்பில் உள்ளன. இந்த எந்திரங்கள் வேளாண் பொறியியல் துறையில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. டிராக்டரால் இயங்கக்கூடிய அனைத்து கருவிகளும் டிராக்டருடன் மணிக்கு ரூ.340 என்ற குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
 
மண் தள்ளும் எந்திரம் நிலம் சமன் செய்ய மணிக்கு ரூ.840 என்ற குறைந்த வாடகையிலும், சக்கர வகை மண் அள்ளும் எந்திரங்கள் மணிக்கு ரூ.660 என்ற வாடகையிலும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.

எனவே, வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் தேவைப்படும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் வேளாண் பொறியியல் துறையின் உபகோட்ட அலுவலகங்களை அணுகி பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via