திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

by Editor / 30-11-2023 09:22:12am
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 48 மணி நேரத்தில் புயலாக வலுபெற வாய்ப்பு இருப்பதால் சென்னை கடலூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை திருவாரூர் காரைக்கால் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக லேசான மழை மற்றும் அவ்வப்போது கனமழை பெய்து வந்தது.நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்த நிலையில் இன்று காலை திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது.குறிப்பாக திருவாரூர் மன்னார்குடி வலங்கைமான் நன்னிலம் ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மிதமான மழையும் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை குடவாசல் நீடாமங்கலம் ஆகிய பகுதிகளில் கனமழையும் பெய்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டி பகுதியில் 67.2 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.அதேபோன்று முத்துப்பேட்டையில் 52. 2 மில்லி மீட்டரும் குடவாசலில் 46.2 மில்லி மீட்டர் மழை அளவும் நீடாமலத்தில் 44.4 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவாகியுள்ளது.மாவட்டத்திலேயே குறைத்தபட்சமாக திருவாரூரில் 23 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

Share via