மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா?- மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழகத்தில் சமீப காலமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சற்று அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை பரவியதை தொடர்ந்து கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் 2 வார காலத்துக்கு முழு ஊரடங்கு அமலில் இருந்தது.
நோய் தொற்று சற்று குறைய ஆரம்பித்ததை அடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு ஒவ்வொரு மாத இறுதியிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நிபுணர் குழு மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தளர்வுகளை அறிவித்து வருகிறார்.
தற்போது அமலில் உள்ள ஊரடங்கு நாளை (சனிக்கிழமை) முடிவடைகிறது. எனவே ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா? என்னென்ன தளர்வுகளை அறிவிக்கலாம்? என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
இதற்கான கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் சமீப காலமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சற்று அதிகரித்துள்ளது. எனவே அதை கருத்தில் கொண்டு அடுத்த கட்ட தளர்வுகள் குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
இந்த கூட்டம் முடிந்ததும் அடுத்தகட்ட தளர்வுகள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும். பள்ளிகளை திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கிராமப்பகுதிகளில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் வகையில் கிராமப்புற பள்ளிகளை திறக்க ஆய்வு செய்யலாம் என சமீபத்தில் ஐகோர்ட்டு கூறி உள்ளது.
அதன் அடிப்படையில் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. இதேபோல தியேட்டர்கள், கலை நிகழ்ச்சி அரங்குகள் இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது. அது பற்றியும் ஆலோசனை நடத்தப்படலாம்.
அதே நேரத்தில் அண்டை மாநிலமான கேரளாவில் நோய் தொற்று தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது. எனவே தமிழகத்தில் எச்சரிக்கையாக இருப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடக்கின்றது.
Tags :



















