காஷ்மீரில் உயிரிழந்த குமரி  வீரரின் உடல்   24 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் 

by Editor / 31-07-2021 06:55:44pm
காஷ்மீரில் உயிரிழந்த குமரி  வீரரின் உடல்   24 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் 



காஷ்மீரில் பணியின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டு, ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.


கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே உள்ள கூற்றவிளாகத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ஸ் (43). 2002-ம் ஆண்டு முதல், இந்திய எல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்தார். இவருக்கு செர்லின்மீனா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.


காஷ்மீரில் பணியில் இருந்த ஸ்டீபன்ஸ் கடந்த 29-ம் தேதி சக ராணுவ வீரர்களுடன் பணிக்குச் செல்வதற்காக, பொருட்களை வாகனங்களில் ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். இதுகுறித்து, உடனடியாக கூற்றவிளாகத்தில் உள்ள ஸ்டீபன்ஸின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், கூற்றவிளாகம் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இறந்த ஸ்டீபன்ஸின் உடல் (ஜூலை 31) காலை திருவனந்தபுரம் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டது


.ஸ்டீபன்ஸின் உடலுக்கு கூற்றவிளாகம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரண்டுவந்து அஞ்சலி செலுத்தினர். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஜெகநாதன், மற்றும் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்தினர்.


பின்னர் ஸ்டீபன்ஸின் உடல் அவரது குடும்பக் கல்லறைத் தோட்டத்தில் எல்லை பாதுகாப்புப் படை ஆய்வாளர் ரவிகுமார் தலைமையில் 24 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 

 

Tags :

Share via