பாளை., மதுரையில் முன்னாள் படைவீரர்கள் நல அலுவலக மையக் கட்டடங்கள் திறப்பு
பாளையங்கோட்டையில் ரூ.70.75 லட்சம் மதிப்பு, மதுரை மாவட்டம், மதுரை ரயில் நிலையம் அருகில் ரூ.86.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்துடன் கூடிய மையக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ரூ.70.75 லட்சம் செலவிலும், மதுரை மாவட்டம், மதுரை ரயில் நிலையம் அருகில் ரூ.86.35 லட்சம் செலவிலும் கட்டப்பட்டுள்ள முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்துடன் கூடிய மையக் கட்டடங்களை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.தமிழ்நாட்டில் சுமார் 1,27,000 முன்னாள் படைவீரர்கள், 56,000 கைம்பெண்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் உள்ளனர். இவர்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு முன்னாள் படைவீரர் நலத்துறை மூலமாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.
முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களின் நலன் மற்றும் குறைகளை தீர்ப்பதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்துடன் கூடிய மையக் கட்டடம் கட்டிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில், தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் 3002 சதுர அடியில் ரூ.70.75 லட்சம் செலவிலும், மதுரை மாவட்டம், மதுரை ரயில் நிலையம் அருகில் 2550 சதுர அடியில் ரூ.86.35 லட்சம் செலவிலும் கட்டப்பட்டுள்ள முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்துடன் கூடிய மையக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி, பொதுத்துறை செயலாளர் டாக்டர் டி. ஜகந்நாதன், அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags :