டாஸ்மாக் கடைகள் ஏன் திறந்தோம்! - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில், வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதையடுத்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "கொரோனா முதல் அலையின்போது தொற்று உச்சத்தில் இருந்த சமயத்தில் அப்போதைய அரசு டாஸ்மாக் கடைகளை திறந்துவைத்தது.
இப்போது, தொற்று எண்ணிக்கை குறைந்து தொற்றே இல்லை என்கிற நிலையை எட்டும் சமயத்தில்தான் அம்மாதிரியான முடிவை வருவாய்த்துறை எடுத்திருக்கிறது. முதல் அலையின்போது அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கும் இரண்டாம் அலையின்போது இந்த அரசு எடுப்பதற்கும் உண்டான பாகுபாடுகளை உணர வேண்டும்" என தெரிவித்தார்.
இதையடுத்து, சென்னையில் அதிகமான இடங்களில் திமுக வெற்றி பெற்றதால் சென்னைக்கு கூடுதலாக கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளதற்கு பதிலளித்த அமைச்சர், "இந்த அரசின் மீது வைக்கப்படும் விமர்சனங்களை எதிர்கொள்வதற்கு தயங்க மாட்டோம். விமர்சனம் நேர்மையாக இருந்தால் அதனை களைய முற்படுவோம்.
தவறாக இருந்தால் விமர்சனம் வைப்பவர்களிடம் விளக்கம் அளிப்போம். திட்டமிட்டு திராவிட இயக்கத்தின்மீது புழுதிவாரி தூற்றுவதற்கென்றே தொடர்ந்து இதனை ஒரு நண்பர் செய்துகொண்டிருக்கிறார். அவர் எங்களிடம் நேராக தெரிவிக்கட்டும், அவரிடம் விளக்கம் அளிப்போம்" என பதிலளித்தார்.
Tags :