100நாள் வேலை ஆதார் கட்டாயம்: முத்தரசன் கண்டனம்..
100 நாள் வேலைக்கு ஆதார் கட்டாயம் எனக்கூறி வேலை பெறும் உரிமையை மறுப்பதா? என்று முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட உடல் உழைப்புத் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் வேலை பெறுவதற்கு சட்டபூர்வ உரிமை வேண்டும் என போராடி வந்த நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒன்றிய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை 2005 செப்டம்பர் 5ம் தேதி நிறைவேற்றியது. இச் சட்டத்தின் கீழ் நடைபெறும் திட்டப் பணிகளில், ஊரகப்பகுதி உடல் உழைப்புத் தொழிலாளர் குடும்பங்கள் ஆண்டுக்கு தலா நூறு நாள் வேலை பெறுவதற்கு சட்டபூர்வ உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2006 பிப்ரவரி 2 முதல் நடைமுறையில் உள்ள வேலை பெறும் உரிமைச் சட்டத்தை சீர்குலைத்து, சிதைத்து முற்றாக அழித்தொழிக்கும் முயற்சியில் பாஜக ஒன்றிய அரசு பத்தாண்டுகளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இணைய வலை தள இணைப்பு நாடு முழுவதும் கிடைக்காத நிலையில், நகரப் பகுதிகளிலும் சீரான வலைதள தொடர்பு உறுதி செய்யாத நிலையில், தேசிய அலைபேசி வருகைப்பதிவு முறையை (என்எம்எம்எஸ்) கட்டாயப் படுத்தி ஏற்கனவே லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை பறித்துள்ளது. தற்போது வேலை அட்டையுடன் ஆதார் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என நிர்பந்தம் செய்கிறது.
Tags :