நெல்லை மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை!

by Editor / 09-01-2024 11:08:41pm
நெல்லை மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை!

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் மீது 38 கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் நடத்த கோரி ஆணையாளரிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், அம்மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை நடத்தினார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் இடையேயான பிரச்னை மற்றும் கருத்து வேறுபாடு பல மாதங்களாக மாமன்ற கூட்ட அரங்கத்தில் நடைபெற்று வந்த நிலையில் முதற்கட்டமாக அமைச்சர் கே.என்.நேருவை கவுன்சிலர்கள் நேரடியாக சந்தித்து மேயர் மீது புகார் அளித்தனர்.

இதற்கு அடுத்த கட்டமாக மாநகராட்சி மேயர் சரவணன் மாமன்ற உறுப்பினர்களின் எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. பல கோப்புகள் நிலுவையில் உள்ள நிலையில் அவரை மாற்ற வேண்டுமென 45 மாமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு கடிதம் அனுப்பினர்.

அதனைத்தொடர்ந்து, 38 மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி மேயர் சரவணன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமென திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர். மேலும், மாமன்ற உறுப்பினர்கள் அளித்த மனுவின் கையொப்பம் போலியானது என மேயர் மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் அளித்த நிலையில் 38 கவுன்சிலர்களையும் மாநகராட்சி ஆணையாளர் நேரடியாக அழைத்து விபரங்களை கேட்டறிந்தார்.

மாநகராட்சி மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு வருகின்ற 12-ம் தேதி காலை 11 மணி அளவில் மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் கடந்த டிசம்பர் 27-ம் தேதி அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் இன்று (ஜன.09) நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு நெல்லையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வருகை தந்தார். பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் நெல்லை திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம் மைதீன் கான் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனையின் போது மாமன்ற உறுப்பினர்கள் யாரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மற்றும் விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. தலைமையின் உத்தரவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாக மாமன்ற உறுப்பினர்கள் தகவல் தெரிவித்தனர்.

 

Tags : நெல்லை மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை!

Share via