ஆளுநர் ஆர். என் ரவி மன்னிப்பு கேட்க வேண்டும்: வைகோ
மகாத்மா காந்தியை இழிவு படுத்திய ஆளுநர் ஆர். என். ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 127 ஆவது பிறந்தநாள் விழாவில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி கலந்துகொண்டு, நேதாஜிக்கு பெருமை சேர்க்கிறோம் என்ற பெயரில், மாவீரர் நேதாஜியின் வரலாற்றையே சிறுமைப்படுத்தி பேசியிருக்கிறார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு 1942 இல் மகாத்மா காந்தி தொடங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கம் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவம், பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போரிட்டதால்தான் ஆங்கிலேயர்கள் நாட்டுக்கு விடுதலை அளிக்கின்ற நெருக்கடிக்கு உள்ளானார்கள் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. ஆர்எஸ்எஸ் தொட்டிலில் வளர்ந்த ஆர். என். ரவி-க்கு தெரிய வாய்ப்பில்லை. இந்திய விடுதலைப் போராட்டத்தில் எள் முனை அளவு கூட பங்கேற்காத இந்துத்துவ தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை பெருமிதத்துடன் பறைசாற்றும் ஆர். என். ரவியிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாதுதான். ஆர். எஸ். எஸ்- இன் பிரச்சாரகராக ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு தேசப்பிதா காந்தியை இழிவு படுத்திய ஆளுநர் ஆர். என். ரவி மன்னிப்பு கேட்க வேண்டும்"என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :