காங்கிரஸ்  கோஷ்டிகளிடையே காரசார வாக்குவாதம்-பதறி ஓடிய பழனிநாடார்.

by Editor / 28-01-2024 12:26:28pm
காங்கிரஸ்  கோஷ்டிகளிடையே காரசார வாக்குவாதம்-பதறி ஓடிய பழனிநாடார்.

தென்காசியில் நடந்த காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டத்தின் போது பழனிநாடார் MLA மற்றும் மாநிலச் செயலாளர் செல்வராஜ் கோஷ்டிகளிடையே காரசார வாக்குவாதம் - மோதல் - கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அசாம் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்ட போது, பாஜக.வினரால் தாக்கப்பட்டதாக கூறப்பட்டது மற்றும் தேசப்பிதா மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தமிழகம் ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்தும் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதே போன்று தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் யானை பாலம் அருகில் உள்ள வணிக வரித்துறை உதவி ஆணையர்  அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்ட நிலையில், ஆர்ப்பாட்டத்தின் போது பழனிநாடார் MLA கோஷ்டியை சேர்ந்த மாநில பேச்சாளர் பால்துரை குறிப்பிட்ட நிர்வாகிகள் பெயரை மட்டும் தெரிவித்ததுடன், மாநிலச் செயலாளரான ஆலங்குளம் செல்வராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெயரை கூறாததால் இருதரப்பினர் இடையே ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திலேயே ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் கடுமையாக பேசியதுடன் கைகலப்பு மோதலிலும் ஈடுபட்டனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடந்த இடம் போர்க்களம் போன்று காட்சி அளித்தது. இதனால் வேறு வழியின்றி கூட்டத்தில் இருந்து தப்பித்தால் போதும் என்று பழனி நாடார் MடA தனது காரில் ஏறி செல்ல முயன்றார். ஆனால் செல்வராஜ் கோஷ்டியினர் காரை முற்றுகையிட்டு பழனி நாடாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரையும் ஆபாசமாக பேசியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எப்போதும் கோஷ்டி பூசலுக்கு பெயர் பெற்ற காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசையும், கவர்னரையும் கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மோதிக் கொண்ட சம்பவம் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags : காங்கிரஸ்  கோஷ்டிகளிடையே காரசார வாக்குவாதம்-பதறி ஓடிய பழனிநாடார்.

Share via

More stories