பதிவுத்துறையில் ஜூலையில் மட்டும்  ரூ.1,242 கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்

by Editor / 04-08-2021 04:25:30pm
பதிவுத்துறையில் ஜூலையில் மட்டும்  ரூ.1,242 கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்

பதிவுத்துறையில் ஜூலை மாதம் ரூ.1242 கோடிக்கு வருவாய் ஈட்டி உள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். இது சென்ற நிதி ஆண்டில் ஜூலை 2020 மாத வருவாயை காட்டிலும் ரூ.598 கோடி அதிகமாகும்.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், அனைத்து மண்டலங்களிலும் பணி சீராய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அரசின் வருவாயை எவ்வித கசிவுமின்றி வசூலிக்க முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், நிலுவை ஆவணங்களை சரியாக இருப்பின் உடன் விடுவித்தல், தணிக்கை இழப்புகளை வசூலித்தல், சரியான ஆவணங்களை தாமதமின்றி பதிவு செய்தல் முதலான யுக்திகளை கையாண்டு வருவாயை பெருக்க அறிவுறுத்தப்பட்டது.


இதன் அடிப்படையில் அலுவலர்கள் செயல்பட்டதின் பேரில், ஜூலை மாதத்தில் வருவாய் ரூ.1242.22 கோடி ஈட்டப்பட்டுள்ளது.
கொரானா நோய் தொற்று காரணமாகவும் மற்றும் அரசின் ஊரடங்கு காரணமாகவும் பதிவுத்துறையில் கடந்த மாதங்களில் வருவாயானது 2019 20 நிதியாண்டை காட்டிலும் குறைந்துள்ள நிலையிலும், ஜுலை 2021 மாத வருவாயானது மேலே கண்டுள்ள முயற்சிகளால் பேரிடர் ஏதும் இல்லாத காலத்திற்கான வருவாயினை நெருங்கியுள்ளது என்று செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via