ரூ.1.5 கோடியில்   12 இடங்களில் தாய்ப்பால் வங்கிகள்  அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Editor / 06-08-2021 04:20:50pm
ரூ.1.5 கோடியில்   12 இடங்களில் தாய்ப்பால் வங்கிகள்  அமைச்சர் மா.சுப்பிரமணியன்



தமிழ்நாட்டில் ரூ.1½ கோடி செலவில் 12 இடங்களில் தாய்ப்பால் வங்கிகள் அமைக்கப்பட உள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


சென்னை தி.நகரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் தினமும் கொரோனா பரிசோதனையானது அதிகளவில் செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் 1 லட்சத்து 48 ஆயிரம் அளவில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று 1 லட்சத்து 57 ஆயிரம் அளவில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து தினமும் 1 லட்சத்து 50 ஆயிரம் என்ற எண்ணிகையில் இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.


இந்நிலையில் பரிசோதனையின் எண்ணிக்கை அதிகமாவதால் கொரோனா தொற்றின் எண்ணிக்கையும் தினசரி சற்று அதிகமாகக் காணப்படுகிறது. இது பெரிய அளவில் இல்லாமல் 20, 30 என்ற எண்ணிக்கையிலேயே இருக்கிறது. ஆனால் தொற்று பரவல் 1.2 சதவீதம் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நடவடிக்கைகளின் மூலம் மிக விரைவில் தொற்று பரவல் முற்றுபெற வாய்ப்புள்ளது.
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு ரெயிலில் வரும் பயணிகளிடம் எந்த அளவில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்பதை ரெயில் நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய உள்ளேன்.


இரண்டு தவணைக்கான தடுப்பூசிகள் முறையாக அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. இதனாலேயே தடுப்பூசி தட்டுப்பாடு தமிழ்நாட்டில் இல்லை. தற்போது ஒன்றிய அரசு வழங்கி வரும் கோவாக்சின் தடுப்பூசியைப் பொறுத்தவரை முதல் தவணை செலுத்த இருப்பவர்களுக்கே முன்னுரிமை அளித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது கோவிஷீல்டு தடுப்பூசிகளே அதிகளவில் வருகின்றன.


 2 கோடியே 28 லட்சத்து ஒரு ஆயிரத்து 650 தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் 2 கோடியே 26 லட்சத்து ஒரு ஆயிரத்து 612 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கையிருப்பில் 8 லட்சத்து 26 ஆயிரத்து 560 தடுப்பூசிகள் உள்ளன. இன்னும் 3 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் வரவிருக்கின்றன. இதையும் சேர்த்து மொத்தம் இருக்கும் 11 லட்சம் தடுப்பூசிகள் தாராளமாக செலுத்தப்பட உள்ளன.


மேலும் தனியார் மருத்துவமனை களில் இலவசமாக தடுப்பூசிகள் என்ற திட்டத்தின் மூலம் அம்மருத்துவமனைகள் 20 லட்சத்து 38 ஆயிரத்து 680 தடுப்பூசிகளை வாங்கியுள்ளன. இதில் 16 லட்சத்து 34 ஆயிரத்து 959 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 721 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.


நமக்கு 12 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. இதில் 2 கோடியே 50 லட்சம் அளவிலான தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில் இன்னும் 9 கோடியே 50 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. இந்த மாதத்திற்கு 79 லட்சம் வழங்குவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.


தடுப்பூசிகள் செலுத்துவதில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டதாக பாராளுமன்றத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக கூடுதல் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்குவதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆட்சியில் பேருந்து நிலையங்களில் ‘தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை’ திறக்கப்பட்டன. ஆனால் அந்த அறைகளில் ஒரு மின்விசிறி உட்பட எந்த வசதியும் இல்லை.


ஆனால் அனைத்து வசதிகளுடன் கூடிய ‘தாய்ப்பாலூட்டும் அறை’ ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ‘தாய்ப்பாலூட்டும் அறை’ இன்னும் இரண்டு மாதங்களில் அமைக்கப்படும்.


சைதாப்பேட்டையில் அதிநவீன வசதியுடன் கூடிய ‘தாய்ப்பாலூட்டும் அறை’ அமைக்கப்பட உள்ளது. இதற்காக தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


மேலும் தமிழ்நாட்டில் 12 ‘தாய்ப்பால் வங்கிகள்’ அமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஒரு தாய்ப்பால் வங்கி கட்டுவதற்கு ரூ.12 லட்சம் அளவில் செலவாகும்.ரூ.1 கோடியே 44 லட்சம் செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்படும்.
தமிழ்நாட்டில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் 38 மாவட்டங்களிலுமே செயல்படத் தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம் அனைவருக்கும் மருத்துவ சேவை வழங்கப்படும். இதன் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் 1 கோடி மக்கள் பயன்பெறுவர்.இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 

Tags :

Share via