வேளச்சேரியில் இன்று மறு வாக்குப்பதிவு

by Editor / 16-04-2021 04:41:06pm
வேளச்சேரியில் இன்று மறு வாக்குப்பதிவு


வேளச்சேரி சட்டசபைத் தொகுதியில் உள்ள 92 வாக்குச்சாவடியில் இன்று  மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அந்த வாக்குச்சாவடி ஆண் வாக்காளர்களுக்கானது என்பதால் வாக்களிக்கத் தகுதி பெற்ற 548 ஆண்கள் மட்டும் மறுவாக்குப்பதிவின் போது வாக்களிக்க உள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாகக் கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மிகவும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 234 சட்டசபைத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 72.8% வாக்குகள் பதிவானது.
வேளச்சேரி சட்டசபைத் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்ற நாளன்று மாலையில் மூன்று மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள் இரு சக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்ற நபர்களை மடக்கிப்பிடித்த பொதுமக்கள், அவர்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.முதலில் அங்குப் பழுதான வாக்குப்பதிவு இயந்திரம் எனக் கூறப்பட்ட நிலையில், பின்னர் அந்த இயந்திரங்கள் சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெற்றது என்றும் அதில் 15 வாக்குகள் பதிவாகியிருந்தது என்றும் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
இதனால் அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் எனக் காங்கிரஸ் உள்ளிட்ட பல வேட்பாளர்கள் வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து வேளச்சேரி தொகுதியில் 92 வது வாக்குச்சாவடியில் 17ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ள குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதில் வாக்காளர்களின் இடது கையின் நடுவிரலில் மை வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தேர்தலில் ஒவ்வொரு வாக்குகளும் முக்கியமானது என்பதால் வேளச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த சில தினங்களாகவே 92வது வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அங்குப் பிரசாரம்  நிறைவடைந்தது. 92வது வாக்குச்சாவடியில் இன்று வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மறுவாக்குப்பதிவு நடைபெறும் 92வது வாக்குச்சாவடி ஆண் வாக்காளர்களுக்கானது என்பதால் இங்கு வாக்களிக்கத் தகுதி பெற்ற 548 ஆண்கள் மட்டும் மறுவாக்குப்பதிவின் போது வாக்களிக்க உள்ளனர்.

 

Tags :

Share via