சித்திரை மாதத்தில் தென் தமிழகத்தில் நடைபெறும் கொடை விழா

by Admin / 18-05-2024 04:52:34pm
சித்திரை மாதத்தில் தென் தமிழகத்தில் நடைபெறும் கொடை விழா

சித்திரை மாதத்தில் தென் தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களில் கோவில் கொடை விழா கோடை காலத்தில் நடக்கும் மிக முக்கியமான விழாவாகும். சிறு தெய்வங்கள் வழிபாட்டில் இந்த விழாக்கள் முதன்மையான இடத்தை பிடித்திருக்கின்றன. ஒவ்வொரு சமூகமும் அவரவர்களுக்கென்று நிர்மாணிக்கப்பட்ட கோவில்களில் நடத்தப்படும் இந்த கொடை விழா.. மக்கள் தங்கள் அடுத்த கட்ட உழைப்பை நோக்கி செல்வதற்கு முன்னால் மகிழ்ச்சியாக- குடும்பத்தோடும் தங்கள் உறவுகளோடும் ஊரோடும் கொண்டாடும் விழா.

இந்தக் காலத்தில் பள்ளிகள் ,கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டிருப்பதன் காரணமாக ஒரே இடத்தில் அனைவரும் சேர்ந்து இருந்து அவரவர் சமூக சடங்கின் அடிப்படையில் கொண்டாடப்படுகின்ற விழாவாகும் இது.. கொடை விழாவில், இரவு முழுவதும் வில்லுப்பாட்டு ,கரகாட்டம், கறி விருந்து, அன்னதானம் என மகிழ்ச்சியாக ஒரு மூன்று நாட்களை கழிப்பதற்கான ஏற்பாடாக இறைவழிபாட்டோடு தொடர்புடைய நிகழ்வாக நாம் இதை பார்க்கலாம். இந்த விழாக்கள் முடிந்த பிறகு பள்ளிகளும் கல்லூரிகளும் திறப்பதோடு விவசாயம் சார்ந்திருக்கிறவர்கள் மூன்று மாத காலத்திற்கு தங்களுடைய விளைநிலங்களில் பயிரிடுவதற்கான பணிகளை தொடங்கச் செய்வார்.

ஏற்கனவே, பயிரிட்டு அறுவடை செய்து வைத்திருக்கின்ற பொருட்களை எல்லாம் தங்கள் உறவுகளுக்கு  வழங்கி வழி அனுப்பி வைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்ற ஒரு விழாவாகவும் இதை நாம் பார்க்க முடியும். தமிழர்கள் தங்களுடைய தொன்று தொட்டு வருகின்ற பண்பாட்டு- கலாச்சாரத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்படுகின்ற இந்த விழாக்கள் உறவுகளை சேர்ந்து மகிழ்ச்சியை கொண்டாடி மகிழ்கின்ற ஒரு பொழுதாகவே நாம் பார்க்க முடியும்

/ ஐந்து நிலப் பிரிவுகளை கொண்ட சமூக அமைப்பில் தமிழர்கள் வாழ்ந்து வருவதால், குறிஞ்சியில் இருப்பவர்கள் அவர்கள் சார்ந்திருக்கின்ற விழாக்களுக்கு முல்லையில் இருக்கின்ற தங்கள் உறவுகளை அழைத்து சந்தோசப்படுத்தி அனுப்பி வைப்பது போன்று முல்லை நிலத்தில் இருக்கின்ற தம் உறவுகள் கொண்டாடும் விழாக்களுக்கு குறிஞ்சி நிலத்தைச் சார்ந்தவர்கள் செல்வதும் ஒரு நிகழ்வாக இதை நாம் பார்க்க முடியும் .

பாலை நிலத்திலும் நெய்தல் நிலத்திலும் ஒரு குறிப்பிட்ட சாரார்கள் வசித்து வந்ததின் காரணமாக அவர்கள் சார்ந்து இருக்கின்ற விழாக்கள் அவர்களுடைய உறவு சார்ந்தவர்கள் தொலைதூரங்களில் இருப்பவர்களை எல்லாம் அழைத்து கொண்டாடி... அந்த நெய்தல் சார்ந்திருக்கின்ற பகுதிகளோடு தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி திளைத்ததையும் நாம் பார்க்க முடியும் .ஆனால், மருத நிலத்திலும் குறிஞ்சி நிலத்திலும் முல்லை நிலத்திலும் தான் அதிகமாக திருவிழாக்கள் அனைத்து சமூகம் சார்ந்தவர்கள் கொண்டாட கூடிய நிலையை நாம் பார்க்க முடியும்

. கடலோரப் பகுதியிலும் சில வறட்சியான பகுதியில் இருக்கக்கூடியவர்கள் இந்த திருவிழாக்களை மிக விமர்சையாக கொண்டாடப்படாததையும் நாம் பார்க்கமுடியும்/. ஆக, திருவிழாக்கள் கொடை விழாக்கள் நடத்தப்படுவதின் நோக்கம் மக்கள் மகிழ்ச்சியாக- ஓய்வாக தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கான நகர்வாகவே இதை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்க முடியும்

. சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுகின்ற, இந்த கொடை விழாக்கள் மழைவேண்டி கொண்டாடப்படுகின்ற ஒரு விழாவாகவும் அதிகமாக வெப்பத்தின் காரணமாக அம்மை போன்ற நோய்கள் ஏற்படுகின்ற பொழுது அதை தவிர்க்கின்ற நிலையில் வேப்பிலை, மஞ்சள் தண்ணீர் வைத்து இறைவனை ...இல்லை ,அம்மனை வழிபடுகின்ற போக்கு கிராமப்புற கோயில் கொடை விழாக்களில் பார்க்க முடிகின்றது.

இன்றைக்கு அம்மை போன்ற நோய்கள் ஒழிக்கப்பட்டு விட்டாலும் கூட அதனுடைய எச்சமாக வேப்பிலை, மஞ்சள் தண்ணீர் வைத்து இறை வழிபாட்டை நடத்துவது அதன் தொடர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும் .ஆக, வெயில் காலத்தில் நோயை எதிர்கொள்வதற்காக திருவிழாக்களோடு இந்த நிகழ்வை அவர்கள் வைத்திருக்கிறார்கள். இவ்விழாக்களில்,பொதுவாக அரிசி கூழ் ஊற்றுகிற நிகழ்வையும் நாம் பார்க்க முடியும்.

எல்லாவற்றிற்கும் அடிப்படை மதம். மதம் சார்ந்த  விழா ,மனிதர்கள் நலம் சார்ந்து உள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.. பின்னாளில், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி என்று பொதுவான விழாக்கள் வந்தாலும் கிராமத்தில் உறவுகளோடு உறவுகளாக இருந்து கொண்டாடப்படுகின்ற இந்த விழா முதன்மையான ஒரு விழாவாகவே இன்று வரைக்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

 

சித்திரை மாதத்தில் தென் தமிழகத்தில் நடைபெறும் கொடை விழா
 

Tags :

Share via