தென்காசி மாவட்டம் முழுவதும் 19,20 ரெட் அலர்ட்,21,22 ஆரஞ்ச் அலர்ட். ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர்
சென்னை வானிலை மையம் தென்காசி மாவட்டம் முழுவதும் 19.05.2024 மற்றும் 20.05.2024 ஆகிய இரண்டு தினங்கள் சிவப்பு நிற (Red Alert) எச்சரிக்கையும் மற்றும் 21.05.2024, 22.05.2024 ஆகிய நாட்களுக்கு ஆரஞ்ச் நிற (Orange Alert) எச்சரிக்கையும் விடுத்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தினால் குற்றாலம் பிரதான அருவி. ஐந்தருவி, பழைய குற்றால அருவி மற்றும் மாவட்டத்தில் இதர பகுதிகளில் உள்ள அருவிகளிலும் அணைக்கட்டு பகுதிகளிலும் பொது மக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டத்தில் பரவலாக கனமழை மற்றும் அதீத கனமழை பொழிவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் ஆறு மற்றும் குளங்களில் நீர்வரத்து அதிகமாக வருவதற்கு சாத்தியகூறு இருப்பதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் உரிய எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருந்திட அறிவுறுத்தப்படுகிறது. தெரியாத ஆழமும் நீரோட்டமும் உள்ள தண்ணீருக்குள் செல்ல வேண்டாம். மேற்சொன்ன காலங்களில் இடி, மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதால் விவசாய தொழிலாளர்கள் ஆடு, மாடு மேய்ப்பவர்கள், இடி மின்னலின் போது வெட்ட வெளியில் நடக்க வேண்டாம் என்றும், மரங்களுக்கு கீழ் பாதுகாப்பிற்காக ஒதுங்க வேண்டாம் என்றும், பெரு மழையின் போது காய்ச்சிய குடி நீரினையே பருகி நோயிலிருந்து தங்களை காத்துக் கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது. மழையினால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-1077 அல்லது 04633-290548 என்ற எண்களில் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
Tags : தென்காசி மாவட்டம் முழுவதும் 19,20 ரெட் அலர்ட்,21,22 ஆரஞ்ச் அலர்ட். ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர்