மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீன்வர்கள் போராட்டம்...
மத்திய அரசின் மீன் வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில், மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு இந்திய கடல்சார் மீன்வள மசோதாவை நாடாளுமன்றத்தில் அமல்படுத்த உள்ளது. இந்த மசோதாவின் மூலம் மீன்பிடித் தடைக்காலம், மீன் பிடிப்பதற்கான நேரம் உட்பட அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்பதால் மீனவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக இந்த சட்ட மசோதாவால் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் எனக் கூறப்படும் நிலையில், திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மணப்பாடு, ஆலந்தலை, அமலிநகர் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள், மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில், மீனவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக , வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை கடற்கரையில் நிறுத்தியுள்ளனர்.
மேலும், நெல்லை மாவட்டத்தில் 9 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள், மீன் பிடிக்கச் செல்லாமல், சட்ட மசோதாவை கைவிட வலியுறுத்தி, நெல்லை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அதேபோல், சென்னை கலங்கரை விளக்கம் அருகே, தமிழ்நாடு - புதுச்சேரி மீனவர் பேரமைப்பு சார்பில் மெரினா கடற்கரை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 6 மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்ற இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மெரினா கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் கருப்பு கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
இந்திய கடல் பரப்பை பெரு முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் வகையில் இந்த மசோதா இருப்பதாக குற்றம் சாட்டிய அவர்கள், இந்த மசோதாவை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெறவில்லை என்றால், இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து துறைமுகங்களையும் முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
Tags :