மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி நகை திருடும் கும்பல் கைது....

by Admin / 10-08-2021 05:01:10pm
மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி நகை திருடும் கும்பல் கைது....

மூதாட்டிகளை மட்டுமே குறி வைத்து அவர்களின் கவனத்தை திசை திருப்பி, அலேக்காக நகைகளை திருடி செல்லும் கொள்ளை கும்பலை போலீசார் சிசிடிவி கேமிரா உதவியுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
வட சென்னை பகுதிக்கு உட்பட்ட மிண்ட், ஜி.எச் சாலை, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் ஷேர் ஆட்டோவில் வரும் மூதாட்டிகளை மட்டுமே குறி வைக்கும் கும்பல் அவர்களிடம் சென்று பேச்சு கொடுத்து, தன்னை நல்லவர்கள் போல் காட்டிகொண்டு அவர்களின் கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடி செல்வதாக திருவொற்றியூர் போலீசாருக்கு புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது.

அதிலும் குறிப்பாக பாதிக்கப்பட்ட மூதாட்டிகள் ஷேர் ஆட்டோவில் வரும்போது, உடன் பயணிக்கும் இக்கும்பலைச் சேர்ந்த பெண்கள் மூதாட்டிகளிடம் மிகவும் கனிவாகப் பேசி குடும்ப விஷயங்கள் குறித்து நலன் விசாரிப்பில் ஈடுபடுகின்றனவாம். பின்னர் அவர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொள்ளும் அக்கும்பலைச் சேர்ந்த பெண்கள் மூதாட்டிகளிடம் " அம்மா உங்கள் நகை அறுந்துள்ளது, கவனிக்கவில்லையா? இப்படி கவனக்குறைவாக இருந்தால் எப்படி?  நகைகளை கழற்றி பையில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றவாறு உரிமையாகப் பேசி அவர்களின் கவனத்தை திசைத் திருப்பிகின்றனவாம்.

அவர்களின் பேச்சை நம்பி நகைகள் அனைத்தையும் கழற்றி கைப்பையில் போட்டு கொள்ளும் மூதாட்டிகளுக்கு தெரியாமலேயே, நகைகள் இருக்கும் பையை பிளேடால் கிழிக்கும் அப்பெண்கள் நகையை திருடிக்கொண்டு தப்பி செல்கின்றனராம். மற்றொருபுறம் இதே பாணியில் கனிவாகப் பேசி அவர்களின் தோளில் கைபோட்டு நெருக்கமாக அமர்ந்து அவர்களின் கழுத்தில் உள்ள நகைகளை, அவர்களுக்கே தெரியாமல் அறுத்து எடுத்துச் செல்லும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இவர்களால் பாதிக்கப்பட்ட மூதாட்டிகளின் குடும்பத்தார் பலர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கக் குவியவே இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய மர்ம கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையில் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடும் பகுதிகளான மிண்ட், ஜி.எச் சாலை முதல் திருவொற்றியூர் மார்கமாகச் செல்லும் பகுதிகளில் உள்ள 60 சிசிடிவி கேமிராக்களை கைப்பற்றி ஆய்வு மேற்க்கொண்டு விசாரணை நடத்தினர்.

இந்த தீவிர விசாரணையின் முடிவில் மூதாட்டிகளின் கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடும் கும்பல் பழனியைச் சேர்ந்த கௌரி, சாந்தி மற்றும் சின்னத்தாயி ஆகியோர் என்பதை கண்டறிந்த போலீசார், அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்த சுமார் 12.5 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் பாசப் பிணைப்புடன் பேசி கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடும் இதுபோன்ற கும்பல்களிடம் கவனத்துடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
 

 

Tags :

Share via