கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை - 12 கிலோகஞ்சாவோடு 3 பேர் கைது

by Editor / 16-07-2022 11:42:01am
கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா  விற்பனை - 12 கிலோகஞ்சாவோடு  3 பேர் கைது

தாம்பரம் மாநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக காவல் துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் தாம்பரம் மாநகர போலீசார் கண்காணித்து வந்தனர்.பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகில் புகை பிடித்த மாணவர்களை  பிடித்து விசாரித்ததில் அவர்கள் கஞ்சா புகைத்ததை ஒப்பு கொண்டனர்.

மேலும் அவர்கள் கூகுள் பே மூலம் பணம் அனுப்பினால் வடபழனியை சார்ந்த மோகன் என்பவர் கஞ்சா வழங்குவார் என தெரிவித்தனர். இதை அடுத்து போலீசாரின் அறிவுறுத்தலின்படி கஞ்சா கேட்டு ரூபாய் 12 ஆயிரம் ரூபாயை ஜீ பேவில் அனுப்பியுள்ளனர்பணத்தைப் பெற்றுக் கொண்ட மோகன் போரூரில் வந்து கஞ்சாவை வாங்கி செல்லும்படி கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இரு மாணவர்களுடன் போலீசார் போரூர் விரைந்து சென்றனர். அங்கு மாணவர்களிடத்தில் கஞ்சாவை கொடுத்த போது மறைந்து இருந்த போலீசார் மேகனை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவரிடத்தில் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதை அடுத்து மோகனை விசாரித்ததில், ஆட்டோ ஓட்டுநர் செந்தில் என்பவர் தனக்கு கஞ்சாவை கொடுப்பதாகவும் அதற்கு முன் செந்திலுக்கு GPay மூலம் பணம் அனுப்ப வேண்டும் எனவும் மோகன் கூறியுள்ளார்.

அப்போது செந்திலுக்கும் 15 ஆயிரம் ரூபாய் GPay மூலம் போலீசார் அனுப்பி உள்ளனர். பணத்தைப் பெற்றுக் கொண்டு செந்தில் அம்பத்தூர் ராக்கி திரையரங்கம் அருகே வர சொல்லியுள்ளார். அப்போது மறைந்திருந்த போலீசார் ஆட்டோவில் வந்த செந்திலையும் உடன் வந்து திலீப்குமாரையும் பிடித்து ஆட்டோவில் இருந்து நான்கு கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

தொடர்ந்து போலீசார் செந்திலை விசாரணை செய்ததில்  அம்பத்தூரை சார்ந்த முரளியிடம் பணம் கொடுத்து அனுப்பினால் விசாகப்பட்டினம் அருகில் உள்ள துளி என்ற ஊருக்கு சென்று அங்கிருந்து கஞ்சாவை வாங்கி டிராவல் பேக்கில் துணிகளுக்கு இடையில் மறைத்து ரயிலில் எடுத்து வருவதாகவும் அதை திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டில் தனி வீடு வாடகைக்கு எடுத்து அதில் வைத்து மூன்று பேரும் ஏரியா பிரித்து விற்பனை செய்வதாகவும் ஒப்புக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து வேப்பம்பட்டு சென்ற போலீசார் அந்த வீட்டை சோதனை செய்ததில் அங்கு  நான்கு கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டு அதனையும் பறிமுதல் செய்தனர்.மொத்தம் 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மோகன், செந்தில் மற்றும் திலீப் குமாரை கைது செய்து, அவர்கள் பயன்படுத்திவந்த ஆட்டோ மற்றும் கஞ்சா விற்ற 15 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

 

 

Tags : Selling ganja to college students - 3 arrested with 12 kg of ganja

Share via